ஈரோடு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்தர உறுதிப் பிரிவு (IQAC)மற்றும் ஆசிரியர் மேம்பாட்டுப் பணிக்குழு ஆகியவை இணைந்து பேராசிரியர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சி முகாமை கல்லூரியின் பாரதியார் அரங்கத்தில் நடத்தின.
இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகக் கல்வித் தொழில்நுட்பத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கு நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வி. விஸ்வப்ரியா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பெ. வானதி தலைமை வகித்துச் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் டி. யமுனாவதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இப்பயிற்சி முகாமில் கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிறைவாக, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ். நளினி நன்றியுரை வழங்கினார்.



