உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே மன நலத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.மன நலம் சிறப்பாக இருந்தால் தான் உடல் நலம் மேம்படும்.
சத்தான உணவு, போதுமான ஓய்வு, தினசரி உடற்பயிற்சி முக்கியம்.வீட்டு விலங்குகளைப் பராமரிப்பது மன நலனை மேம்படுத்த பெருமளவில் உதவுகிறது.
செல்லப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரும் எனப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
வீட்டு விலங்குகள் எவ்வாறு மன நலனை மேம்படுத்துகின்றன என்பதற்கான சில முக்கிய காரணங்கள்…
பூனை, நாய் போன்ற விலங்குகளைக் கொஞ்சுவதும், அவற்றைத் தடவிக் கொடுப்பதும் உடலில் ‘கார்டிசோல்’ என்ற மன அழுத்த ஹார்மோனைக் குறைத்து, ‘ஆக்ஸிடோசின்’ என்ற மகிழ்ச்சி ஹார்மோனை அதிகரிக்கிறது.
செல்லப்பிராணிகள் வளர்ப்பு மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு எளிய வழி என்றும் உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் வேலைப்பளு, நீண்ட நேரப் பணிகள்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய பணிகள், அன்றாடப் பொறுப்புகள் ஆகியவை நம்மை மன அழுத்தத்திற்கும் சோர்விற்கும் உள்ளாக்குகின்றன. பலர் அலுவலகத்தில் ஏற்பட்ட கவலைகளையும் பிரச்சினைகளையும் வீட்டிற்கும் கொண்டு வருகிறார்கள். இதனால் வீட்டில் இருக்கும் நேரத்திலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்வது கடினமாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், செல்லப்பிராணிகளை வளர்ப்பது மன அழுத்தத்தைக் குறைத்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
நாய், பூனை, பறவை, முயல் போன்ற செல்லப்பிராணிகள் நமக்கு அன்பான துணையாகவும் மனதிற்கு ஆறுதலாகவும் இருக்கின்றன. அவற்றுடன் நேரம் செலவிடுவது வேலை தொடர்பான கவலைகளில் இருந்து நம் கவனத்தை மாற்ற உதவுகிறது. நாயுடன் விளையாடுவது, பூனையை அன்புடன் வருடுவது அல்லது செல்லப்பிராணியுடன் அமைதியாக அமர்ந்திருப்பது கூட மனதில் அமைதியை ஏற்படுத்தும். அவற்றின் இருப்பு தனிமையை குறைத்து, தற்போதைய தருணத்தை ரசிக்க நம்மை ஊக்குவிக்கிறது.

செல்லப்பிராணிகளை பராமரிப்பது ஆரோக்கியமான தினசரி பழக்கத்தையும் உருவாக்குகிறது. உதாரணமாக, நாய்களுக்கு தினமும் நடைப்பயிற்சி தேவைப்படுவதால், அவற்றை வளர்ப்பவர்களும் வெளியில் சென்று நடக்கத் தொடங்குகிறார்கள். நாயுடன் நடப்பதும் விளையாடுவதும் உடல் இயக்கத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்தும்.
செல்லப்பிராணிகளை வளர்ப்பது பொறுப்புணர்வையும் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அவற்றிற்கு உணவு அளிப்பது, அவற்றின் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது, நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது மற்றும் அவற்றின் உடல்நலத்தை கவனிப்பது போன்ற பொறுப்புகள் நமக்கு ஒரு நல்ல தினசரி நடைமுறையை உருவாக்குகின்றன. வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வந்தாலும்,நம் செல்லப்பிராணியை கவனித்துக்கொள்வது மனநிறை வையும் மகிழ்ச்சியையும் அளிக்கலாம்.
மேலும், செல்லப்பிராணிகளுடன் நாம் உருவாக்கும் உணர்வுப்பூர்வமான உறவும் மிகவும் முக்கியமானது. நமது வேலை, வெற்றி, தோல்வி அல்லது தவறுகளை வைத்து செல்லப்பிராணிகள் நம்மை மதிப்பிடுவதில்லை. நாம் வீட்டிற்கு வந்தவுடன் அவை அன்புடனும் உற்சாகத்துடனும் நம்மை வரவேற்கின்றன. இப்படிப்பட்ட நிபந்தனையற்ற அன்பும் துணையும், கடினமான அல்லது மன அழுத்தமான காலங்களில் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.
எனவே, விலங்குகளைப் பராமரிப்பது மனதிற்கும் உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கும்.இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், தனிமை உணர்வைத் தணிக்கவும்,உடல் செயல்பாட்டை அதிகரிக்கவும், ஆரோக்கியமான தினசரி பழக்கங்களை உருவாக்கவும் உதவுகிறது. இருப்பினும், செல்லப்பிராணி வளர்ப்பது ஒரு நீண்டகால பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றிற்கு தேவையான உணவு,மருத்துவ பராமரிப்பு, பாதுகாப்பு,நேரம் மற்றும் அன்பை வழங்கத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே செல்லப்பிராணிகளை வளர்ப்பது சிறந்தது.
வீட்டு விலங்குகளால் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.சுகாதார சீர் கேடுகள் ஏற்படலாம்.
வீட்டில் உள்ளவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்.
சுகாதாரச் சீர்கேடுகளைத் தடுப்பது எப்படி?
*உங்கள் செல்லப் பிராணிகளுக்குக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் மற்றும் புழு நீக்க மருந்துகளையும் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும்.
*பிராணிகளைக் கையாண்ட பிறகும், அவற்றின் உணவு மற்றும் கழிவுகளைச் சுத்தம் செய்த பிறகும் கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
*அவற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
*தொடர்ச்சியாக குளிப்பாட்டுவது, அவற்றின் படுக்கைகளைச் சுத்தம் செய்வது அவசியம்.
*அலர்ஜி உள்ளவர்கள் செல்லப் பிராணிகளைத் தங்கள் படுக்கையறைக்குள் அனுமதிப் பதைத் தவிர்க்க வேண்டும்.

கட்டுரையாளர்:
டாக்டர் ஜி.ராஜமோகன்,
ஓய்வுபெற்ற உளவியல் பேராசிரியர்,
சென்னை மாநிலக் கல்லூரி,
9087007908.
rajamohansanthanam@gmail.com.



