கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்படஉள்ள மேம்பாட்டு பணிகளுக்கு நேற்று (டிச.21) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது: அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை கிட்டாம்பாளையம் கிராமத்தில் 280.64 ஏக்கர், திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தெக்கலூர் கிராமத்தில் 35.40 ஏக்கர் ஆக மொத்தமாக 316.04 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பகுதியாக கூட்டுறவு முறையில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய கூட்டுறவு தொழிற்பேட்டையாகும்.
இத்தொழிற்பேட்டையில், 90 சென்ட் மனைகள் 37-ம், 45 சென்ட் மனைகள் 241-ம், 30 சென்ட் மனைகள் 164-ம், 15 சென்ட் மனைகள் 143 மொத்தம் 585 தொழில் மனைகள் பிரிக்கப்பட்டு, விற்பனைசெய்யப்பட்டுள்ளன.
உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்தொழிற்பேட்டையினை, முதல்வர் ஆய்வு மேற்கொண்டு, உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நானும் மாவட்ட ஆட் சியரும் இங்கு ஆய்வு மேற் கொண்டோம். அதனைத்தொடர்ந்து, இத்தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள் அமைத்தல், தண்ணீர் குழாய்கள் பதித்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் நிர்வாக அலுவலகம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படவுள்ளன. இதில் தமிழ்நாடு அரசின் பங்கான ரூ.10 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளின் பங்கு ரூ.14.61கோடி ஆகும்.
“30,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு”
இதன்மூலம் பொறியியல், விசைத்தறி, பின்னலாடை போன்ற பல உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்கள் அமைவதற்கான சூழ்நிலை தொழில் முனைவோர்களுக்கு தமிழகஅரசால் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
தொழிற் பேட்டை முழு அளவில் செயல்பட தொடங்கும்போது இந்நிறுவனங்கள் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளும், சுமார் 30,000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
இந்த தொழிற்பேட்டை ஆசி யாவிலேயே மிகப்பெரிய தொழிற் பேட்டையாக உருவாக்கப்பட உள்ளது. ஓர் ஆண்டிற்குள் 585 மனைகளிலும், தொழில்தொடங்க அரசு அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் வழங்க தயாராக உள்ளது.
பயனாளிகளின் பங்கினை விரைவாக வழங்கினால் பணிகள் விரைவில் நிறைபெறும். அரசு வழங்கும் உதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தி மிகச்சிறந்த தொழிற்பேட்டையாக இதனை உருவாக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஜி.திருமுருகன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனி ச்சாமி, கூட்டுறவு தொழிற் பேட்டையின் நிர்வாக அலுவலர்/தொழில் கூட்டுறவு அலுவலர் கு.சுகந்தி , அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை மேலாளர் ஆர்.சந்திரசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி.ராமகிருஷ்ணன், டி.கே.பழனிசாமி, கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர், கிட்டாம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



