fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட தொழில் மையம் மூலம் 80 தொழில் திட்டங்களுக்கு ரூ.18.51 கோடி மானியத்துடன் கடன்

கோவை மாவட்ட தொழில் மையம் மூலம் 80 தொழில் திட்டங்களுக்கு ரூ.18.51 கோடி மானியத்துடன் கடன்

கோவை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் (2022-2023) ஆம் ஆண்டில் 80 தொழில் திட்டங்களுக்கு ரூ.18.51 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் தொழில் துவங்கி பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 25 மற்றும் 35 சதவிகிதம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களின் மூலம் நேரடி வேளாண்மை தவிர்த்து உற்பத்தி, சேவை மற்றும் வாணிபம் சார்ந்த தொழில்களை துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 55 வயது வரையிலான முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான திட்ட மதிப்பீட்டில், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களை துவங்குவதற்கு நிலம், கட்டிடம் மற்றும் இயந்திரம்/ தளவாடங்களை உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 55 வயது வரையிலான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ரூ.15 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீட்டில், வாணிபம் சார்ந்த தொழில்களை துவங்குவதற்கு 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்த மக்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களை ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், சேவை சார்ந்த தொழில்களை ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும் கிராம பகுதிகளில் துவங்குவதற்கு 35 சதவிகிதம், நகர பகுதிகளில் துவங்குவதற்கு 25 சதவிகிதம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற மக்கள் தங்கள் விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மாற்றுச்சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், திட்ட அறிக்கை மற்றும் விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் (2022-2023) ஆம் ஆண்டில் 80 தொழில் திட்டங்களுக்கு ரூ.18.51 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 95 நபர்களுக்கு ரூ.1.05கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 314 நபர்களுக்கு ரூ.10.72 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

‘சொந்தத்தொழிலால் கூடுதல் வருமானம்’

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி விகாஷ் (வயது 24) தெரிவித்ததாவது,
கணபதியில் வசித்து வருகிறேன். டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் தரமதிப்பீடு செய்யும் பணி செய்து வந்தேன்.

மாதம் ரூ.12,000 என்ற குறைந்த அளவிலான சம்பளம் கிடைத்தது. அப்பா மட்டும்தான் இருக்கிறாங்க. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலில் என் அப்பாவுக்கும், அண்ணனுக்கும் அனுபவம் இருந்தது. அவர்களிடமிருந்து நானும் கற்றுக்கொண்டேன்.

பின்னர் தனியாக தொழில் தொடங்க ஆசைப்பட்டேன். போதிய பணவசதி இல்லாததால் தொழில் தொடங்குவதில் சிரமம் இருந்தது. இந்நிலையில் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குவது குறித்து அறிந்தேன்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட தொழில் மையத்தை அணுகி புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48.45 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.16.52 லட்சம் மானியத்துடன் கடனுதவி பெற்று ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்கினேன்.

சொந்த தொழிலாக இருப்பதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. குடும்ப நிலையும் உயர்ந்துள்ளது. இந்த தொழில் தொடங்க மானியம் வழங்கிய முதல்வருக்கு நன்றி என்றார்.

‘குடும்பத்தில் மதிப்பு உயர்ந்தது’

பயனாளி திரு.வெங்கடேஷ் (வயது 40) தெரிவித்ததாவது:
ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வருகிறேன். பி.இ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு, ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தேன். படித்த படிப்புக்கு சம்மந்தமல்லாத தொழிலில் பணியாற்றியது கஷ்டமாக இருந்தது.

மெக்கானிக்கல் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே, சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்பது என் லட்சியமாக கொண்டேன். மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கும் திட்டம் குறித்து அறிந்தேன்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.06 கோடி திட்ட மதிப்பீட்டில் துவங்கி ரூ.50 லட்சம் மானியம் பெற்று தொழிற்சாலைகளுக்கு தேவையான தூரிகைகளை உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகிறேன்.

இதன் மூலம் நீண்ட கால லட்சியம் நிறைவேறியது. நான் தனியார் நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை செய்த நிலைமாறி, இன்று என்னுடைய நிறுவனத்தில் 7 -8 பேருக்கு சம்பளம் வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். குடும்பத்தில் யாரும் இதுவரை சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவி தொழில் செய்தது இல்லை.

முதல்முறையாக நான் இந்த நிறுவனத்தை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறேன். இது என்னுடைய குடும்பத்தினரிடையே என் மதிப்பை உயர்த்தி உள்ளது. மிகவும் பெருமையாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுவதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கி. மோகன்ராஜ்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கோயம்புத்தூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img