fbpx
Homeபிற செய்திகள்காங். தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்!

காங். தேர்தல் அறிக்கையில் பாஜகவை வீழ்த்த வியூகம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி, ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக களம் காணுகிறது.

இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கி வெற்றி பெறலாம் என கணக்கு போட்டு பாஜக செயல்பட்டது. பாஜக அரசின் இந்த வியூகம் எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் இது தெளிவாகி இருக்கிறது.

மேலும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பலர், போட்டியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சில வேட்பாளர்கள் பாஜக கூட்டணியில் இருந்தே விலகி, இந்தியா கூட்டணி பக்கம் நகர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக, பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இந்தியா கூட்டணிக்கு பெரும் பலத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும், 2025 முதல் மத்திய அரசு பணிகளில் 50% பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும், முதியவர்கள், விதவைப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் ரூ.1000 உயர்த்தப்படும். மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும். பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி. கொண்டுவரப்படும்….

இப்படியாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் நாட்டு மக்களின் நலனைப் பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. தற்போதைய கொள்கையில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் விலகி, மாநிலங்களின் விருப்பத்தின் அடிப்படையில் நீட் மற்றும் க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான சுயாட்சியை மாநிலங்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிப்பதில் காங்கிரசுக்கு இருக்கும் அக்கறை வெளிப்பட்டுள்ளது.

கூடுதலாக, மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்குவதாக கட்சி உறுதியளிக்கிறது, முதியோர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கான அணுகலை எளிதாக்கும் முயற்சியில், கல்விமேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் வழங்க காங்கிரஸ் உறுதியளிக்கிறது. இந்த முன்முயற்சியானது நிதித் தடைகளைத் தணித்து இளைஞர்களிடையே கல்வித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கு நலத்திட்டம் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும் அவர்களின் சமூக நல்வாழ்வை மேம்படுத்தவும் முயல்கிறது.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதனை பாஜக கூட்டணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்!

படிக்க வேண்டும்

spot_img