ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும் விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலை வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் உணவு – தண்ணீர் தேடி சாலையைக் கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீரை தேடி யானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வானங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது.
எனவே வாகன ஓட்டிகள் இந்தப் பகுதியை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதைப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.