கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு குழு கூட்டம், கிழக்கு மண்டலத் தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில், கிழக்கு மண்டல அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் பேசியதாவது:
முதலமைச்சர் அவர்கள் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பில் உலக முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு, பயணம் மேற்கொண்டுள்ளதற்கும், அமெரிக்கப் பயணம் வெற்றியடையவும் கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் சார்பிலும், கோவை மாநகர மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோவை மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுத்தமைக்கு, முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், அவர் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் கோவை மாநகராட்சியில் மிகுந்த அக்கறை கொண்டு, இதுவரை ஏராளமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, ஏராளமான பணிகள் முடிவுற்ற நிலையில், கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 20 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடுபட்ட பணிகள் குறித்த அட்டவணையை பொறுப்பு அமைச்சரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் துறை சார்ந்த பணிகளான சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பு எஸ்.ஐ. எச்.எஸ். காலனி மேம்பாலம், 24 வது வார்டுக்கு உட்பட்ட எஸ் பெண்டு மேம்பாட்டுப் பணிகளை விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் அறிவுறுத்தினார்.
57 வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை இடத்தில், உலக தரத்திலான சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையவிருக்கும் நிலையில், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
மேலும் 24ஜ்7 சூயஸ் பணிகளை விரைந்து முடிக்கவும், சுகாதாரப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மற்றும் சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நவீன், பொன்னுசாமி, கோவிந்தராஜ், விஜயகுமார், கோவை பாபு, சித்ரா மணியன், பூபதி, கீதா சேரலாதன், மோகன், பாக்கியம் தனபால், அன்பு தர்மராஜ், சாந்தாமணி, தீபா தளபதி இளங்கோ, சுமித்ரா தீபக், சிங்கை. மு. சிவா, ஆதி மகேஸ்வரி திராவிட மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.