fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் மகளிர் உரிமை திட்டம்விண்ணப்பம், டோக்கன் நாளை முதல் விநியோகம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்விண்ணப்பம், டோக்கன் நாளை முதல் விநியோகம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நிருபர்களிடம் கூறியதாவது:


கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.
கோவை மாவட்டத்தில் 11,43,875 குடும்ப அட்டைகள் உள்ளன. 1401 ரேஷன் கடைகள் உள்ளன. விண்ணப்பப்பதிவு முகாம் முதல் கட்டமாக 839 ரேஷன் கடைகளை சேர்ந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 562 ரேஷன் கடைகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். முகாம் நடைபெறும் இடங்களில் 500 பேருக்கு நபர்களுக்கு ஒரு தன்னார்வலர் மூலம் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், தகவல் பதிவிற்கு 2979 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். 5 கடைக்கு ஒரு பகுதி அலுவலர், 15 கடைக்கு ஒரு வட்டார அலுவலர் மற்றும் ஒவ்வொரு வட்டத்திற்கும் அந்தந்த வட்டத்தின் வட்டாட்சியர்கள் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர். முகாம் நடைபெறும் இடங்களில் காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்படும்.
ரேஷன் கடை கடைப்பணியாளர் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை நாளை முதல் வீட்டில் நேரடியாக வழங்குவார்.
முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 60 பேருக்கு, மூன்றாவது நாளிலிருந்து ஒரு நாளைக்கு 80 பேருக்கு விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்படும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பப்பதிவு முகாமிற்கு வருகைபுரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (OTP) பெறப்படும்.
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.

விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாதபட்சத்தில், குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.


ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.


குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள் இல்லாதவர்களுக்கென்று தனியாக பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அவர்களுக்கென்று சிறப்பு முகாம் நடத்தப்படும். அரசின் நோக்கம் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதாகும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருபயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர். மாற்றுத்திறனாளியாக இருந்து விண்ணப்பப் பதிவு முகாம் வரமுடியாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img