fbpx
Homeபிற செய்திகள்கோவையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: 53,376 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு கணபதி ராஜ்குமார் எம்.பி,...

கோவையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: 53,376 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு கணபதி ராஜ்குமார் எம்.பி, கலெக்டர் பவன்குமார் தொடங்கி வைத்தனர்

கோவை மாவட்டம், ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக சேக்கிழார் அரங்கத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், வருவாய் கோட் டாட்சியர்(தெற்கு) ராம்குமார், இணை இயக்குநர்(கல்லூரிக் கல்வி) செண்பகலட்சுமி, கற்பகம் கல்வி நிறுவனங்கள் முதன்மை செயல் அலுவலர் கா.முருகையா, கற்பகம் உயர்கல்விக் கழக துணைவேந்தர் முனைவர். சு.ரவி, பதிவாளர் முனைவர் பி.வி.பிரதீப், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ச.புவனேஸ்வரி, கற்பகம் உயர்கல்வி நிறுவன உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் ச.சுதாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள். பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 53 வகையான போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் நேரு விளையாட்டு அரங்கம் மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, சங்கரா கல்லூரி, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, சி.ம்.எஸ். கலை அறிவியல் கல்லூரி, கற்பகம் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தியாகி இராமசாமி நினைவு பள்ளி, வேளாண்மை பல்கலைக்கழகம், வனக் கல்லூரி, கௌமார மடாலயம், அரசு தொழில்நுட்ப கல்லூரி, இராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி என 13 இடங்களில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 10.09.2025 வரை நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் 1768 அரசு ஊழியர்கள், 20,915 கல்லூரி மாணவ மாணவியர்கள், 22,314 பள்ளி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவில் 7,677 நபர்களும், 902 மாற்றுத்திறனாளி ஆண்களும் என மொத்தம் 53,376 நபர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட அளவில் முதலிடத்திற்கு 3000 ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 2000 ரூபாயும் மூன்றாம் இடத்திற்கு 1000மும் பரிசுத்தொகையாக வெற்றிப்பெற்றவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகளும், தனி விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் இடத்தை பெற்றவர்களும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.
மாநில போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1,00,000மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.75,000மும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் பேசியதாவது: தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுக்கு அதிக அளவில் ஊக்கமளித்து வருகின்றார்கள். தமிழ்நாடு விளையாட்டு துறை பல்வேறு சாதனை நிகழ்த்தி வருகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் நன்றாக விளையாடுபவர்கள் நன்றாக படிக்கவும் செய்கின்றார்கள். இந்த விளையாட்டானது பல பேருக்கு வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையாக அமை கின்றது. தற்போது எல்லா விளையாட்டுகளுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. விளையாட்டில் வெற்றிபெறும்போது நல்ல நிறுவனங்களில் பணிக்கு செல்வதற்கு வாய்ப்பும் கிடைக்கின்றது. இந்த வயதில் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடும், விளையாட்டும்தான் பிற்காலத்தில் அவர்களின் 50வது வயதில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு அடித்தளமாக அமைகின்றன.

மேலும், விளையாட்டானது வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் கற்றுத் தருகின்றது. இப்போட்டி களில் பங்குபெறும் நீங்கள் வெற்றிபெற்று நிறைய சாதனைகள் புரிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் பேசுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் கோவை மாவட்டம் மூன்றாவது இடம் பெற்றது. இந்த ஆண்டு இப்போட்டியில் கோவை மாவட்டம் முதலிடம் பிடிக்கவேண்டும். அதற்கான வாய்ப்பு விளையாட்டு வீரர்களான உங்களின் கைகளில் இருக்கின்றது. உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இப்போட்டிகள் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளன. நீங்கள் அனைவரும் இந்த விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடவேண்டும். நம் மாவட்டத்திற்கும், உங்கள் பள்ளி கல்லூரிகளுக்கும், உங்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் போட்டிகளில் வெற்றிபெறவேண்டும் அதற்காக உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img