Homeபிற செய்திகள்ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி 2026-ம் ஆண்டு விளையாட்டு விழா: ‘ஏட்டுக் கல்வியோடு விளையாட்டு அனுபவமும் இணையும்...

ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி 2026-ம் ஆண்டு விளையாட்டு விழா: ‘ஏட்டுக் கல்வியோடு விளையாட்டு அனுபவமும் இணையும் போதே வாழ்க்கை முழுமையடையும்’ ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் அறிவுரை

“வகுப்பறைகள் ஏட்டுக் கல்வியையும் கோட்பாட்டு அறிவையும் மட்டுமே தருகின்றன; ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் விவேகம் விளையாட்டு மைதானங்களில் கிடைக்கும் அனுபவத்திலிருந்தே பிறக்கிறது,” என ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி, தனது 2026-ஆம் ஆண்டு விளையாட்டு விழாவை பள்ளி ஹாக்கி மைதானத்தில் கோலாகலமாகக் கொண்டாடியது. இதில் தலைமை விருந்தினராக சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் பங்கேற்றுச் சிறப்பித்தார்.


காலை 8:30 மணிக்கு, என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. லார்ட்லி லயன்ஸ், ப்ளேஃபுல் பாந்தர்ஸ், டெரிஃபிக் டைகர்ஸ் மற்றும் வில்லி வுல்வ்ஸ் ஆகிய நான்கு ஹவுஸ் மாணவர்களும், என்.சி.சி விமானப் பிரிவு மற்றும் கடற்படைப் பிரிவு மாணவர்களும் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை தலைமை விருந்தினர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் ஏற்றுக் கொண்டார்.

ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ- பள்ளி முதல்வர் ஐலீன் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ -இந்தியன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜான் ஸ்டீவன் மற்றும் ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளியின் முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெல்சி விமல் தலைமையிலான பிரார்த்தனையைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா வரவேற்புரை வழங்கினார். முதல்வர் ஐலீன் ஜெத்ரோ, தலைமை விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.


விழாவைத் தொடர்ந்து, மாணவர் தலைவர் யாஷிக் சுரேஷ் விளையாட்டு வீரர்களுக்கான உறுதிமொழியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைமை விருந்தினர் ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் போட்டிகளைத் தொடங்கிவைத்து பேசுகையில், தனது பசுமையான பள்ளி நினைவுகளையும், இன்றைய மாணவர்களுக்கு விளையாட்டு ஏன் அவசியம் என்பதையும் திருக்குறள் மேற்கோள்களுடன் விளக்கினார்.


தனது பள்ளி நாட்களை நினைவுகூர்ந்த அவர், “1963-64-ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் முதன்முறையாகப் பாட்டியாலாவிலிருந்து வந்த பயிற்சியாளர் மூலம் தடகளப் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
அருட்தந்தை ஃபௌலர் மற்றும் ரத்னவேலு ஆகியோரின் ஊக்கத்தால், இதே ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் நான் வென்ற முதல் ‘கிரிக்‘ (Grigg) பதக்கம்தான் என்னை மாவட்ட அளவிலிருந்து தேசிய மற்றும் மருத்துவக் கல்லூரிப் போட்டிகள் வரை உயர்த்தியது,” என்றார்.


இப்பள்ளியில் பெற்ற வாழ்க்கைப் பாடங்களே, முன்னாள் மாணவர்களைத் தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனிநபர் மற்றும் குழு விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், தடகளம் போன்ற தனிநபர் விளையாட்டுகள் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் மன உறுதியை வளர்ப்பதாகவும் (ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று ஒலிம்பிக்கிற்குத் தயாராகும் கோவை வீரர்களைப் போல), குழு விளையாட்டுகள் விட்டுக்கொடுத்தல், தலைமைத்துவம் மற்றும் கூட்டு முயற்சியைக் கற்றுக்கொடுப்பதாகவும் கூறினார்.
மேலும், கல்வி மற்றும் வாழ்வியல் குறித்து மூன்று திருக்குறள்களை டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் சுட்டிக்காட்டினார்:

‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப…’ (குறள் 392) – அடிப்படை அறிவை நடைமுறை வாழ்க்கையோடு இணைக்கும்போதே கல்வி முழுமை பெறுகிறது.

  • ‘கண்ணுடையர் என்பவர் கற்றோர்…’ (குறள் 393) – கற்றல் என்பது வெறும் புத்தகப் படிப்பல்ல; மைதானம் மற்றும் அனுபவங்கள் மூலம் கற்கும் வாழ்க்கைப் பாடங்களே உண்மையான கல்வியாகும்.
  • ‘கற்க கசடறக் கற்பவை…’ (குறள் 391) – கற்ற நற்பண்புகளின்படி வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
    நிறைவாகப் பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியப் பரிந்துரையை முன்வைத்த அவர், “வாரத்திற்குக் குறைந்தது இரண்டு நாட்களாவது மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை மற்ற அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைத்து, அனைத்து மாணவர்களும் கட்டாயமாக மைதானத்தில் ஒன்றாக விளையாடி வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளப் பள்ளி முதல்வர்கள் வழிவகை செய்ய வேண்டும்“ எனக் கேட்டுக்கொண்டார்.
    தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளை டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ் தொடங்கி வைத்தார். ஓட்டப் பந்தயங்கள், நின்ற நிலையிலான நீளம் தாண்டுதல், மென்பந்து எறிதல் மற்றும் தடை தாண்டும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கராத்தே செயல்விளக்கமும் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்டேன்ஸ் பள்ளி மைதானம் நவீனமயமாக்கல் திட்டங்கள்

கோவை ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ் தனது உரையில் 2027-க்குள் நவீன விளை யாட்டு மைதானங்கள் உருவாக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார்.


இதன்படி, முதற்கட்டமாக, தற்போதுள்ள தடகள ஓடுதளம் (Athletic Track) புதிதாக அமைக்கப்படவுள்ளது.
2027-ஆம் ஆண்டிற்குள் புதிய ஓடுதளத்துடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட ஹாக்கி (Hockey) மைதானங்களும் உருவாக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து கால்பந்து (Football) மற்றும் கிரிக்கெட் (Cricket) மைதானங்களும் நவீனப்படுத்தப்பட உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img