கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி முத்தமிழ் மன்றம், திருக்குறள் உலகம் கல்விச்சாலை ஆகியவை சார்பாக கடந்த 23ம் தேதி சிறப்புப் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
நிகழ்வின் தொடக்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவில் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராம பரிமளம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதனை நல்வழிப்படுத்துவது தொழில்நுட்ப அறிவா? நெறிமுறை சார்ந்த இலக்கிய அறிவா? என்ற தலைப்பிலான பட்டிமன்றம் நடைபெற்றது. பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பட்டிமன்றத்தில் பங்கேற்று அனல் தெறிக்கப் பேசினார்கள். பட்டிமன்ற நடுவர் திருக்குறள் கி.கணேசன் இருந்து ஒருங்கிணைத்துப் பேசினார்.
இவ்விழாவில் மேனாள் கல்லூரிக் கல்வி இயக்குனர் முனைவர் கி.குமாரசாமி சிறப்புரையாற்றும் பொழுது எக்காலத்துக்கும் உரிய திருக்குறளை மாணவர்கள் விரும்பி படித்து அதன்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விழாவில் உலகத் தமிழ் நெறிக்கழகச் செயலாளர் சோ. சிவலிங்கம் திருக்குறள் உலகம் கல்விச்சாலைத் தலைவர் இ தமிழரசன் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் இரா.செல்வி மற்றும்பேராசிரியர்கள், பொதுமக்கள், ஆய்வு மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் மாணவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.



