கடலூர் கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி சாலை பாதுகாப்பு மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி முதல்வர் மேரி கிறிஸ்டினா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சிதம்பரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் அப்புதுரை, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கல்லூரியில் இருந்து கூடுவெளிச்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளி வரை நடந்த பேரணியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 25 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். தலைக்கவசம், சீட்பெல்ட் அணிதல், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தல், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வேல்முருகன், ஒருங்கிணைப்பாளர் ஸ்டான்லி எட்வர்ட் ராயன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



