சென்னிமலை பகுதியில் தேக்கமடைந்துள்ள துணி இருப்புகளை அகற்றும் வகையில், தொடக்கநிலை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கூடுதல் துணிகளை கொள்முதல் செய்யுமாறு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கைத்தறி, ஜவுளி மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜயபாலாஜி தெரிவித்தார்.
ஈரோட்டில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாள்களில் போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் குறைந்த விலையில் ஆடைகளை வாங்கும் வகையில் பவர்லூம் துணிகளின் விற்பனையை அதிகரிக்கவும் கோ-ஆப்டெக்ஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவெக ஆட்சி அமைந்த பின்னர் தமிழகத்தில் 10 புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி புதிய லினன் ரக துணிகளும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களுக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது இந்த இரு நிலையங்களிலும் ரூ.1.43 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
கோ-ஆப்டெக்ஸ் சார்பில் தொடர்ந்து புதிய வடிவமைப்புகளில் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு எடை குறைந்த கோரா பட்டு சேலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
கரூர் ஜவுளிப் பூங்காவில் ஏற்றுமதிக்காக வீட்டு உபயோகத்துக்கான 1,000-க் கும் மேற்பட்ட வகையான ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் விஜய பாலாஜி தெரிவித்தார்.
ஆட்சியர் சு.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆனந்தமோகன், சண்முகன் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் அம்சவேணி, ம.பாலசுப்பிரமணியம், கனிசெல்வி, மோகனம், செந்தில்வேல், முருகன், லட்சுமிபிரபா, பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



