Homeபிற செய்திகள்தமிழக அரசின் வேளாண்மைத் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- கோவை கலெக்டர் பவன்குமார் அழைப்பு

தமிழக அரசின் வேளாண்மைத் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- கோவை கலெக்டர் பவன்குமார் அழைப்பு

கோவை மாவட்டம், ஆனைமலை பரிமளா சுப்ரமணியம் மஹாலில் வேளாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேற்று (8ம்தேதி) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முனைவர் சோமசுந்தரம், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் முரளி அர்த்தநாரி, பூச்சியியல் பேராசிரியர் முனைவர் சுகந்தி, மண்ணியல் பேராசிரியர் முனைவர் ஜானகி, வேளாண்மை துணை இயக்குநர் இரா.விஜயகல்பனா, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை), ஷீலா பூசலட்சுமி, வேளாண் மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் சரவணப் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன், உதவி இயக்குநர், விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை சக்திவேல், வேளாண்மை துணை இயக்குநர் நிர்மலா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகள் அதிகளவில் பயன்பெற வேண்டும். குறிப்பாக, தொண்டாமுத்தூர் வட்டா ரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த சேவைகள் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகள் ஒருங்கி ணைந்த முறையில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மண் வள இயக்கம், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான திட்டம், சிறந்த முறையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டம், பனை உற்பத்தி இயக்கம் மற்றும் வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் அமைக் கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

தென்னை விவசாயிக ளின் நலனை கருத்தில் கொண்டு, ஆழியார் நகர் மற்றும் கண்ணம்பாளையம் ஆகிய இரு இடங்களில் தென்னைக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் புதிய தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், தென்னை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோன்று, வேளாண் பொறியியல் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டம், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு முன்பதிவு செய்வதற்கான ‘இ&-வாடகை’ செயலி, சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், மானியத்தில் மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம், நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி பராமரிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், சாகுபடி செலவைக் குறைக்கவும், நீர் வளத்தைப் பாதுகாக்கவும் உதவும் வகையில் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, கோவை மாவட்ட விவசாயிகள் தங்களது தேவைகளுக்கேற்ப மேற்கண்ட திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயன்பெற வேண்டும். தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டங்களின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் தெரிவித்தார். முன்னதாக, இக்கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், விதைச்சான்று மற்றும் உயர்ம சான்றளிப்புத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த காட்சி அரங்குகள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் மூலம் 8 புத்தொழில் நிறுவனங்களின் காட்சி அரங்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறைகளின் சார்பில் 4 விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img