Homeபிற செய்திகள்சாலையில், தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய அரசுப்...

சாலையில், தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து

கோவை, மாவட்டம் சாய்பாபா கோயில் பகுதியில் சூயஸ் குடிநீர்த் திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று திடீரெனச் சேற்றுக்குழியில் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்திற்காகச் சூயஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சாய்பாபா கோயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர்க் குழாய் பதிப்பதற்காகச் சாலை தோண்டப்பட்டது.
பணிகள் முடிந்த பிறகும், தோண்டப்பட்ட குழி முறையான தரத்துடன் மூடப்படாமல் அரைகுறையாக மண் கொட்டி மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம், எதிர்பாராத விதமாக அந்த அரைகுறை குழியில் இறங்கி ஆழமாகச் சிக்கிக் கொண்டது.
பேருந்து திடீரென ஒருபக்கமாகச் சாய்ந்து குழிக்குள் சிக்கியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்து கவிழாமல் நின்றதால், பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வேதனையுடன் தெரிவிக்கையில் மாநகராட்சி மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் தோண்டப்படும் சாலைகளைப் உடனடியாகச் சீரமைப்பதில்லை. லேசான மழை பெய்தாலோ ? அல்லது வாகனங்கள் சென்றாலோ ? மண் உள்வாங்கிப் பெரிய குழி உருவாகிறது.
குறிப்பாகச் சாய்பாபா கோயில் போன்ற அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பல மாதங்களாக இந்த குழி சரிவர மூடப்படாமல் மண்ணை மட்டும் மூடி விட்டு அலட்சியமாக விடப்பட்டு உள்ளது. பெரிய விபத்து ஏதேனும் நடப்பதற்குள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சேதம் அடைந்த சாலைகளை முழுமையாகத் தார்ச் சாலையாகச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img