Homeபிற செய்திகள்செய்தியாளர்கள் பயணத்தின்போது ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை ஆய்வுசெய்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்

செய்தியாளர்கள் பயணத்தின்போது ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை ஆய்வுசெய்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்

கோவை மாவட்டம், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கொப்பரைத் தேங்காய் கொள்முதல், தரம் பிரித்தல், ஏல நடைமுறை உள்ளிட்ட முழு செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டார்.
இந்த செய்தியாளர்கள் பயணத்தின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், அன்னூர், ஆனைமலை, கோயம்புத்தூர், காரமடை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம், மலையடிப்பாளையம், சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய 10 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையேயான பாலமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் பிற மாவட்ட விவசாயிகளும் மின்னணு முறையிலான ஏலத்தில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அதிக போட்டி மற்றும் மறைமுக ஏலம் காரணமாக இத்திட்டத்தின் கீழ் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கிறது. கோயம்புத்தூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கி வரும் 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 30,405 மெ.டன் கொள்ளளவு கொண்ட 35 சேமிப்புக் கிடங்குகள் அமைக் கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.


அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் வரத்து அதிகமாக இருக்கும் போது விலை குறைவாக இருப்பதால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிடங்குகளில் மிகக் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து, விலை உயரும்போது விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் வரை, அதிகபட்சமாக ரூ.5,00,000- வரை, 5 சதவீத வட்டி விகிதத்தில் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.
2026&-27ஆம் ஆண்டில் மட்டும் பொருளீட்டுக் கடனாக ரூ.10 கோடி வழங்கிட அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 66 விவசாயிகளுக்கு ரூ.2.84 கோடி பொருளீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக ரூ.283.20 கோடி மதிப்பிற்கு 90,460.188 மெ.டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 12,194 விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக பயனடைந்துள்ளனர். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தேங்காய், கொப்பரை உள்ளிட்ட விளைபொருட்களை உலரவைப்பதற்கு 30 உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தி அதிகமாக உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகள் உடைக்கும் தேங்காயை விரைவாக உலரவைத்து கொப்பரையாக மாற்றுவதற்கு சூரிய உலர்த்திகள் அமைக்கப்பட்டு, கட்டணமின்றி அப்பகுதி விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தமிழ்நாட்டிலேயே கொப்பரைக்கான முதன்மையான மின்னணு வேளாண் சந்தையாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனைமலை சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்கு சிறப்பான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த அரசுக்கும், வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், அங்குள்ள விவசாயி ஒருவருடன் கலந்துரையாடினார். அப்போது தங்கராஜ் என்ற அந்த விவசாயி கூறியதாவது:


“நான், ஆனைமலை வட்டம், குப்புச்சிபுதூர் கிராமத்தில் 6 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். அதில் விளையும் தேங்காயை அருகில் உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு சென்று, கொப்பரைத் தேங்காயாக மதிப்புக்கூட்டப்பட்டு, இ-நாம் சந்தையில் அதிக விலைக்கு
விற்று பயனடைந்து வருகிறேன். இந்த விற்பனைக்கூடத்தில் என்னைப் போன்ற விவசாயிகளுக்கு தேங்காயை கொப்பரையாக மாற்ற உலர் கள வசதி, நல்ல விலை கிடைக்கும்வரை இருப்பு வைக்க கிடங்கு வசதி, அவசரத் தேவைக்கு குறைந்த வட்டியில் பொருளீட்டுக் கடன் வசதி, மழைக்காலங்களில் தேங்காயை காய வைக்க சோலார் உலர் களம் மற்றும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய இ-நாம் சந்தை வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஆனை மலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள் ளது.
இவ்வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கும், தமிழக அரசுக்கும் விவசாயிகள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img