கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில், வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்து கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சந்தேகங்களை தீர்க்கும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இதில், வருகையில்லா ஆவணப்பதிவு முறையின் செயல்பாடுகள் செயல்விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன. அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் பேசுகையில், “வரும் 17-ந் தேதி முதலமைச்சரால் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை தொடங்கி வைக்கப்படும்.
முதற்கட்டமாக முதல் மனை மற்றும் முதல் விற்பனை ஆவணப்பதிவுகள் இணையவழியில் மேற்கொள்ளப்படுகின்றன. படிப்படியாக அனைத்து வகையான பத்திரப்பதிவுகளையும் இணையவழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
தொடர்ந்து அமைச்சர் சம்பத்குமார், “வருகையில்லா பதிவு முறையால் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய முடியும். இதனால் கூட்ட நெரிசல், காத்திருப்பு நேரம் குறைவதுடன், பதிவுப்பணிகள் விரைவாக நடைபெறும்“ என்றார்.



