ஈரோடு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கனரா வங்கியின் சார்பில் “கனரா வித்யா ஜோதி” திட்டத்தின் மூலம் 312 மாணவிகளுக்கு ரூ.12.48 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் நேற்று வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் கனரா வங்கியின் 52 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கிளைகளின் மூலம் 52 அரசுப் பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் “கனரா வித்யா ஜோதி” கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 5-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தலா ரூ.3,000/- வீதமும், 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தலா ரூ.5,000/- வீதமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 52 அரசுப் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 312 மாணவியர்களுக்கு ரூ.12.48 இலட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான ஆணை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்நிகழ்வில் போது, உதவி மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, கனரா வங்கியின் ஈரோடு மண்டல துணை பொது மேலாளர் சரவணன், நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் அசோக் குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்த், வங்கி கிளை மேலாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



