பெண்களின் கல்வி மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2026& 2027 கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா இன்று (6ம் தேதி) காலை 10 மணிக்கு, பிஎஸ்ஜிஆர்கேசி முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவிகளின் தலைமைத்திறன், சமூகப் பொறுப்பு, ஒற்றுமை மற்றும் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி இறை வணக்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் ஆர்.நந்தினி வரவேற்புரையாற்றி, மாணவிகளை வரவேற்றார். அவர் தனது உரையில், மாணவர் மன்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தலைமைத்திறன், ஒழுக்கம், பொறுப்புணர்வு, குழுப்பணி மற்றும் சமூகப்பங்களிப்பை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவிகளை ஊக்குவித்தார்.

கல்லூரி வழங்கும் பல்வேறு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தித் திறமைகளை மேம்படுத்துமாறும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர் பி.பீ.ஹாரதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை நடத்தி வைத்தார்.
கல்லூரியின் உயரிய பண்புகளையும் மரபுகளையும் கடைப்பிடித்து, நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த பண்புகளுடன் சமூகத்திற்கு பயனுள்ள குடிமக்களாக திகழ வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட சிவக்குமார் கணேசன் (துணைத்தலைவர், Veranda Learning Solutions Limited) தொடக்க உரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொடர்ச்சியான கற்றல், திறன் மேம்பாடு, புதுமை சிந்தனை மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தன்னம்பிக்கையுடன் தயாராக இருக்குமாறு மாணவிகளை ஊக்குவித்தார். மேலும், தலைமைத்திறன், தகவல் பரிமாற்றத் திறன், விமர்சன சிந்தனை மற்றும் நெறிமுறைகள் ஆகியவை தொழில்வாழ்வில் வெற்றிக்கு அடிப்படையாக அமையும் என்றும் எடுத்துரைத்தார்.
இறுதியாக, அனைவருக்கும் மாணவர் மன்றத் தலைவர் கே.ஜெய்சிகா வர்ஷினி நன்றி கூறினார்.



