fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் சாலை மேம்பாட்டுக்கு புதிய தரநிலைகள் மாநகராட்சி மன்றம் ஒப்புதல்

தூத்துக்குடியில் சாலை மேம்பாட்டுக்கு புதிய தரநிலைகள் மாநகராட்சி மன்றம் ஒப்புதல்

தூத்துக்குடி மாநகரில் பாதுகாப்பான, அனைவருக்கும் ஏற்ற மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் நோக்கில், ‘ஆரோக்கியமான தெருக்கள் கொள்கை’ மற்றும் ‘முழுமையான சாலை மற்றும் தெரு வடிவமைப்பு வழிகாட்டுதல்கள்’ மாநகராட்சி மன்றத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாநகர மேயர் பி.ஜெகன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், துணை மேயர் ச. ஜெனிட்டா மற்றும் மாநகராட்சி ஆணையர் ச. பிரியங்கா முன்னிலையில் இந்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள், UK PACT திட்டத்தின் கீழ் ஐ.ஐ.டி. சென்னை தலைமையிலான குழுவினரால், ITDP India, TERI மற்றும் CENEX ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நகரில் வாகனப் பெருக்கம், போக்குவரத்து நெரிசல், போதிய நடைபாதை வசதிகள் இல்லாமை, ஒழுங்கற்ற வாகன நிறுத்தம் மற்றும் தெருவோர வணிகம் போன்ற காரணங்களால் பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலை ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இந்த புதிய கொள்கை வகுக்கப் பட்டுள்ளது.


இந்த கொள்கையின் மூலம், நகரில் மேற்கொள்ளப்படும் அனைத்து சாலை மற்றும் தெரு மேம்பாட்டுப் பணிகளும் ஒரே மாதிரியான தர நிலைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மேலும், நடைபயணம், மிதிவண்டிப் பயணம் மற்றும் பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் திட்டமிடப்படும்.
அனைவரும் பயன்படுத்தக்கூடிய தொடர்ச்சியான நடை பாதைகள், பாதுகாப்பான பாதசாரிகடப்பிடங்கள், பல்நோக்கு பயன்பாட்டு மண்டலங்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட தெருவோர வணிகப் பகுதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற பேருந்து நிறுத்தங்கள், பாதுகாப்பான சாலைச் சந்திப்புகள், மரங்கள் நிறைந்த பசுமை தெருக்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட வாகன நிறுத்த வசதிகள்.


இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், நடைபயணம் அதிகரிப்பதுடன், சாலை விபத்துகள் குறையும். குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் மேம்படும். மேலும், உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரம் வலுப்பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நகர்ப்புற போக்குவரத்தும் ஊக்குவிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img