திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிகளை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் கிரிவலத்தில் பங்கேற்க வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈசான்ய மைதானம், பழைய பேருந்து நிலையம், அருணாச லேசுவரர் கோவில் ராஜகோபுரம், செங்கம் சாலை, வேட்டவலம்–மணலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்துமிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
மேலும், கிரிவலப்பாதையில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள், சுகாதார வளாக பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகளையும் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட அவர், பயணிகளுக் காக செய்யப்பட்டுள்ள குடிநீர், சுகாதார வளாகங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



