fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி மலர் கண்காட்சியில் மலை ரயில் இன்ஜின், மகாபலிபுரம் கோயில், திருவாரூர் தேர் உட்பட 26...

ஊட்டி மலர் கண்காட்சியில் மலை ரயில் இன்ஜின், மகாபலிபுரம் கோயில், திருவாரூர் தேர் உட்பட 26 அலங்காரங்கள்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளை கவர 7 லட்சம் மலர்களை கொண்டு 21 சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டு தேர்தல் காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை.

கடந்த வாரம் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு, நேற்று 128-வது மலர் கண்காட்சி தொடங்கியது. மே 28-ம் தேதி வரை 10 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.


இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் மலர்மாடம் உள்பட பல இடங்களில் 50 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது.

விழாவின் முக்கிய அம்சமாக பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரம்மாண்ட நுழைவாயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்னேசன் உட்பட பல்வேறு மலர்களால் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஊட்டி மலை ரயில் இன்ஜின், மகாபலிபுரம் கோயில், திருவாரூர் தேர் உட்பட 26 அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை விளக்கும் மலர் அலங்காரங்கள் உட்பட பல்வேறு அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தமாக 7 லட்சம் மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.

வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி இந்த முறை 11 நாட்கள் நடப்பதால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அரங்கமும், பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சர்க்யூட் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

படிக்க வேண்டும்

spot_img