திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் இரு மையங்களில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம், திருவண்ணாமலை கீழ் பென்னாத்தூர் கலசப்பாக்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், போளூர், ஆரணி, செய்யாறு வந்தவாசி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியிலும் எண்ணிக்கை நடைபெறுகிறது.
சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் இரண்டு வாக்கு எண்ணும் மையங்களிலும் அமைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
36 மத்திய ஆயுதப்படை வீரர்களை கொண்ட முதல் அடுக்கும். 24 பேர் கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் இரண்டாவது அடுக்கிலும். துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 126 பேர் கொண்ட உள்ளூர் காவல் துறையினர் மூன்றாவது அடுக்கிலும் என மொத்தம் 186 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆரணி வட்டம், தச்சூர் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்தார்.



