fbpx
Homeபிற செய்திகள்மக்களுக்கு எதுவும் செய்யாத வானதி சீனிவாசன் ஒருபோதும் ஜெயிக்க முடியாது- கோவை வடக்கு தொகுதி தவெக...

மக்களுக்கு எதுவும் செய்யாத வானதி சீனிவாசன் ஒருபோதும் ஜெயிக்க முடியாது- கோவை வடக்கு தொகுதி தவெக வேட்பாளர் பிரசாரம்

கோவை வடக்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர் சம்பத்குமார் வடவள்ளி சுற்றுப்பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

முல்லை நகர் பகுதியில் மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி மனு அளித்தனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சம்பத்குமார் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று வந்தவுடன் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: அரசியலும் வாழ்க்கையும் வேறில்லை இரண்டும் ஒன்றுதான் என்று மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எனவே பொய் வாக்குறுதிகளை எல்லாம் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

தற்பொழுது வரை ஜெயித்த கட்சிகள் எல்லாம் எந்தெந்த துறைகளில் வருமானம் வருமோ அது அனைத்தையும் அந்த குடும்பம் மட்டுமே பெறும் ஆனால் அனைத்தையும் விட்டுவிட்டு வருபவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

தமிழ்நாட்டை திமுகவினர் அவர்களது சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு நினைத்தால் நல்லது செய்தால் கூட பரவாயில்லை. திராவிட மாடல் 1.0 வே சந்தி சிரிக்கும் பொழுது 2.0 வேறா? எங்கள் கட்சியில் திரண்டவர்கள் யாரும் காசுக்காக திரளவில்லை. உங்களால் காசு கொடுக்காமல் கூட்டத்தை கூட்ட முடியுமா?

வானதி சீனிவாசன் ஏற்கனவே தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ஆனால் அந்த தொகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் எனவே அந்த தொகுதி மக்களே அவர் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டனர்.

நீங்கள் முயற்சி செய்தாலும் மக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். நீங்கள் ஜெயிக்க முடியாது. உங்கள் பகல் கனவு பகல் கனவாகவே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் வானதி சீனிவாசனுக்கு ஒரு அட்வைஸ் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்த சம்பத்குமார், பிரதமர் மோடியை சந்தித்தால் ஏதோ ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் கோவை மக்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்க வேண்டாம் கோவை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் உங்களை நம்புவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img