கோவை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய மத்திய மக்கள் தொடர்பகம், கோவை கற்பகம் உயர் கல்வி கழகம் ஆகியன இணைந்து நிதிசார் கல்வி வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை பந்தய சாலை – ரிதம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடத்தின.
கனரா வங்கியின் துணைப்பொது மேலாளர் சைலஜா தலைமை ஏற்று நிதிசார் மேலாண்மை குறித்து விளக்கி பேசினார்.

நிதிசார் கல்வி குறித்த பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் முன்னிலை வகித்தார்.
மத்திய மக்கள் தொடர் பகத்தின் எஸ்.ஆர்.சந்திர சேகர், கற்பகம் உயர்கல்வி கழக இயக்குநர்- முனைவர் தர்மராஜ், காவல்துறை குற்றப்பிரிவு அலுவலர் அருள்முருகன், பாரத ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளர் நடராஜ், நிதிசார் கல்வி ஆலோசகர் ரவி மற்றும் ரிதம் தொண்டு நிறுவன அருட்சகோதரி ஜென்னட் ஆகியோர் பேசினர்.

மாவட்ட முன்னோடி வங்கியின் சந்திரமோகன் நிதிசார் கல்வி உறுதிமொழியை வாசிக்க நாட்டு நலப்பணி மாணவ -மாணவிகள் அதனை ஏற்றுக் கொண்டனர்.
விழிப்புணர்வு நடைப்பயணத்தை கனரா வங்கியின் துணைப்பொது மேலாளர் சைலஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் கற்பகம் உயர்கல்வி கழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



