கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கல்வி நிறுவனங்கள் சார்பில் “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல்வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சி நேற்று (23ம் தேதி) காலை துவங்கியது.
இந்த புகைப்படக் கண்காட்சியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் க. ஈஸ்வரசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலாளர் பேரா.முனைவர் அஜீத்குமார் லால்மோகன் தலைமை வகித்தார்.
இந்தக் கண்காட்சியில் இந்தியக் கடலியல் ஆராய்ச்சியின் கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.லால்மோகனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
டால்பின், திமிங்கலம் மற்றும் அரிய கடற்பசு (டுகாங்) ஆகியவற்றின் வாழ்வியல், உணவுப் பழக்கங்கள், ஒலிதொடர்பு முறைகள், இடம்பெயர்வு ஆகிய வற்றை உள்ளடக்கிய கண்காட்சி கையேட்டை ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் சந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் ஆர்.நந்தினி வெளியிட்டார்.

டால்பின், திமிங்கலம், கடற்பசு (டுகாங்) ஆகிய அரிய கடல்வாழ் பாலூட்டிகளின் உயர்தர புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
நேரடி ஆய்வுகளின் அடிப்படையிலான நம்பகமான அறிவியல் தகவல்களும், மெய்நிகர் உண்மை தொழில்நுட்பக் காட்சிகளும் கடற்பசு, டால்பின், திமிங்கலம் போன்ற கடல் பாலூட்டி உயிரினங்களை பற்றிய வாழ்வியல் உணவுமுறைகள், இடப்பெயர்வு ஒலிதொடர்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
டால்பின் மற்றும் திமிங்கலங்கள் பொதுவாக அறியப்பட்டாலும், கடற்பசு (டுகாங்) என்பது மிகக்குறைவாக அறியப்பட்ட அரிய கடல் பாலூட்டி ஆகும். அதன் தன்மைகள், வகைகள், வாழ்வியல் அதிசயங்கள் மற்றும் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த கண்காட்சி வருகிற 27ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.



