கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் , இரண்டாம் கட்டமாக 50,648 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.

“தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, மகத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்” என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.03.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதல் கட்டமாக சுமார் 1.13 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மேலும், 16 இலட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை 12.12.2025 அன்று தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர்க்கு உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 40239 மகளிருக்கும், தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 5695 மகளிருக்கும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 68137 மகளிருக்கும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 24,800 மகளிருக்கும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 62,113 மகளிருக்கும், சூலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 45,311 மகளிருக்கும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 50,558 மகளிருக்கும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 56,627 மகளிருக்கும், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 34,355 மகளிருக்கும், வால்பாறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 37,870 மகளிருக்கும், என மொத்தம் 4,25,705 மகளிருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.510.84 கோடி தொகையானது வழங்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக கோவை மாவட்டத்தில் கடந்த ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரிய 1,74,599 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து ஆனைமலை வட்டாரத்தில் 3253 மகளிருக்கு ரூ.3.90 கோடி மதிப்பிலும், அன்னூர் வட்டாரத்தில் 2801 மகளிருக்கு ரூ.3.36 கோடி மதிப்பிலும், கோயம்புத்தூர் வடக்கு வட்டாரத்தில் 12,548 மகளிருக்கு ரூ.15.05 கோடி மதிப்பிலும், கோயம்புத்தூர் தெற்கு வட்டாரத்தில் 5360 மகளிருக்கு ரூ.6.43 கோடி மதிப்பிலும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 1547 மகளிருக்கு ரூ.1.85 கோடி மதிப்பிலும், மதுக்கரை வட்டாரத்தில் 5265 மகளிருக்கு ரூ.6.31 கோடி மதிப்பிலும், மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 3800 மகளிருக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலும், பேரூர் வட்டாரத்தில் 4.929 கோடி மதிப்பிலும், பொள்ளாச்சி வட்டாரத்தில் 4.191 கோடி மதிப்பிலும், சூலூர் வட்டாரத்தில் 6190 மகளிருக்கு ரூ.7.42 கோடி மதிப்பிலும், வால்பாறை வட்டாரத்தில் 764 மகளிருக்கு ரூ.91.68 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 50,648 மகளிருக்கு தற்போது இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.5.06 கோடி வீதமும் ஆண்டிற்கு ரூ.60.77 கோடி மகளிர் உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என மொத்தம் 4,76,353 மகளிருக்கு மாதம் ரூ.1000/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.47.63 கோடி தொகையும், ஒரு ஆண்டிற்கு ரூ.571 கோடி தொகையானது வழங்கப்படுகிறது.
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த செட்டிபாளையம் பேரூராட்சியை சேர்ந்த பயனாளி பூமணி தெரிவித்ததாவது:
என் பெயர் பூமணி. நான் போத்தனூர் செட்டிபாளையம் பேரூராட்சியில் கோனார் வீதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் சண்முகம், லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். எனக்கு இரண்டு குழந்தைகள். என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. தற்போது என் மகன் மட்டும் எங்களுடன் வசித்து வருகிறான். குடும்பம் ஏழ்மையானது. என்னுடைய அன்றாட செலவிற்குகூட என்னுடைய கணவரிடம் அல்லது மகனிடம் கேட்டு வாங்கவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கலைஞர் உரிமைத்திட்டம் குறித்து அறிந்து எங்கள் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்தேன்.
தற்போது இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளியாக தேர்வுசெய்யப்பட்டு, ரூ.1000 என்னுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. என்னுடைய அவசிய தேவைக்கான செலவினை மேற்கொள்ள இந்த தொகை மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. மேலும், விடியல் பயணம் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மகளிர்களுக்கென்று சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். எனவே, இத்திட்டத்தின் மூலம் எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
கோவை மாவட்டம்.



