தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். அடுத்த மாதம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழலில் அடுத்தடுத்து விஜய் பொதுவெளியில் வருவது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாநாட்டில் விஜய், பிரதமர் மோடியை “பாசிசத்தின் அடையாளம்“ என்றும், முதல்வர் ஸ்டாலினை “அங்கிள்” என்றும் விமர்சித்தார். இது அவரது ரசிகர்களை கவர்ந்தாலும், ஆழமான அரசியல் பார்வை இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
விஜய்யின் அரசியல் பயணம் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. மதுரை மாநாட்டில் கூடிய கூட்டம் அவரது அரசியல் சக்தியை வெளிக்காட்டியதா அல்லது வெறும் சினிமா கவர்ச்சியா? என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
தமிழ்நாட்டில் அரசியல் என்பது திராவிட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. சமூக நீதி, சாதி சமத்துவம், மொழிப் பெருமை போன்ற கொள்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. விஜய்யின் தவெக இந்த கொள்கைகளை எப்படி முன்னெடுத்துச் செல்லும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விஜய், பெரியார் மற்றும் அம்பேத்கார் போன்ற தலைவர்களைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவர்களின் கொள்கைகளை அவர் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பது தெளிவாக இல்லை. ஒரு சினிமா நடிகராக அவர் பெற்ற புகழ், அரசியல் தலைவராக அவருக்கு உதவுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
மதுரை மாநாட்டில் விஜய்யின் பேச்சில் கொள்கை சார்ந்த விஷயங்கள் குறைவாக இருந்தன. பெண்கள் பாதுகாப்பு, மீனவர்கள் பிரச்சனை, டாஸ்மாக் ஊழல், கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வு போன்ற விஷயங்களைப் பற்றி பேசினார். ஆனால், அதற்கான தீர்வுகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.
கொள்கை விளக்கங்கள் இல்லாதது, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2026 தேர்தலில் விஜய் ஒரு முன்னோட்டமாக களமிறங்கலாம்.
ஆனால் அவர் ஒரு அரசியல் ஆர்வலராக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறார். ஒரு அரசியல் நட்சத்திரமாக விஜய் மாறுவதற்கு இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என்பதே உண்மை!



