fbpx
Homeபிற செய்திகள்அரசு பள்ளியில் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்க பூமிபூஜை

அரசு பள்ளியில் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்க பூமிபூஜை

கோவை கோவில்பாளையம் சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா மற்றும் நவீன ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தவர்களை சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை குழு தலைவர் ஆர்.ஆர். பாலசுந்தரம், வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கலந்துகொண்டு புதிய அரங்கத்தைத் திறந்து வைத்து, பூமி பூஜையிலும் பங்கேற்று பேசியதாவது:

இந்தப் பள்ளிக்கு உதவிய அனைத்து தனியார் நிறுவனத்திற்கும் நன்றி. ராக் அமைப்பின் இந்த புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இப்பள்ளியானது நல்ல வரலாறு படைத்த பள்ளியாகும்.

இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகம் கட்ட பூஜை நடைபெற்றது. இதுபோல ஆய்வகம் இங்கு மட்டுமல்லாமல் மற்ற அரசு பள்ளிகளிலும் வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் இதுபோல் திட்டம் தனியார் மூலம் துவங்க தயாராக உள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மறைந்த சுவாமிநாதனை பற்றிய உரையை ஏ.வி. குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் ஏ.வி வரதராஜன் வாசித்தார். தொடர்ந்து சி ஆர் எஸ் மெமோரியல் திட்டத்தின் திட்ட அறிக்கையை ராக் அமைப்பின் நிறுவனரும், சிஆர்ஐ பம்ப்ஸ், தலைவருமான சௌந்தரராஜன் வாசித்து பேசியதாவது:

இந்தப் பள்ளியில் சுமார் 6000 சதுர அடியில் ஆய்வகங்கள் அமைய உள்ளன. அதில் அறிவியல் ஆய்வகம் 1300 சதுர அடியிலும், கெமிஸ்ட்ரி ஆய்வகம் 1300 சதுர அடியிலும், பயாலஜி ஆய்வகம் 1000 சதுர அடியிலும், ரோபோட்டிக் லேப் உடன் கூடிய கம்ப்யூட்டர் ஆய்வகம் 1000 சதுர அடியிலும் அமைய உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விழாவில் சிஆர்ஐ குழுமம் சார்பில் கோவையில் உள்ள 12 அரசு பள்ளிகளை தத்தெடுத்து பராமரிக்க 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

ராக் அமைப்பு பற்றிய உரையை ராக் அமைப்பின், தலைவர் துளசிதரன் வாசித்தார். பள்ளி அறிக்கையை, பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர், எஸ் கெத்சி வேதப் பிரியா வாசித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் தி. கோமதி, சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய செயலர் அட்மா தலைவர் சுரேஷ் குமார், பேரூர் கழகச் செயலர் சுரேந்திரன், சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி தலைவர் கோமள வள்ளி கந்தசாமி, மோப்பிரிபாளையம் பேரூராட்சித் தலைவர் சசிகுமார், சர்க்கார் சாமக்குள பேரூராட்சி துணைத்தலைவர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே ஆர் முத்துசாமி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணகுமாரி சுரேந்திரன், எஸ்.எஸ். குளம் பள்ளி தலைமையாசிரியர் விமலா, சிஆர்எஸ் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img