அகில இந்திய கட்டுநர்கள் சங்க நாமக்கல் மையம் சார்பில், இலவச மருத்துவ முகாம் மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை, கட்டுநர்கள் சங்கத் தின் நாமக்கல் மைய தலைவர் பி.எஸ்.டி.தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் நாமக்கல் மையத்தின் பொருளாளர் பி.வி.சுப்பிரமணியன், விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.இராசாமணி கலந்து கொண்டு பேசுகையில், கட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் இரண்டு இலவச மருத்துவ முகாம் மூலமாக ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார்.
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் நாமக்கல் மையத்தின் தலைவரும், பி.எஸ்.டி. குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் தென்னரசு பேசுகையில், மாதத்தில் இரண்டு முறை என்ற வகையில் மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பொது மக்களுக்கு உடல்நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நடைபெற்ற 7 முகாம்களில் மொத்தம் 2,800-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப் படுவோர்ருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது என்றார்.
திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குழுவினர் பங்கேற்று பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில் மோகனூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில், நாமக்கல் மையக் கட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் குணசேகர், சகாதேவன், நடராஜ், காளியப்பன், ரவிச்சந்திரன், பால சுப்பிரமணியன், கமலநாதன், நட ராஜன், மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கட்டுநர்கள் சங்க செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.



