fbpx
Homeபிற செய்திகள்விஜய் உருவாக்கும் 4 முனை போட்டி - யாருக்கு சிக்கல்?

விஜய் உருவாக்கும் 4 முனை போட்டி – யாருக்கு சிக்கல்?

தமிழக அரசியலில் அதிக எதிர்பார்ப்போடு தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கினார். அக்கட்சி தொடங்கி 1 வருடம் கடந்துவிட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம் என்று கூறி வந்த விஜய், அதில் எதையும் சாதிக்க முடியாமல் தனிமரமாகவே நிற்கிறார்.


விஜய்க்கு விசிக உடன் கூட்டணி வைக்கும் ஆசை இருந்தது. ஆனால் திருமாவளவனோ திமுக கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவை மட்டுமே தவெகவால் தன்பக்கம் இழுக்க முடிந்தது.


அடுத்ததாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய் காய் நகர்த்தினார். ரகசிய பேச்சுவார்த்தை கூட நடந்ததாக சொல்லப்பட்டது. பாஜகவுடன் கூட்டணி ஏற்படுவதற்கு முன், அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கூட விஜய்க்கு ஆதரவாக இருந்தனர்.

ஆனால் பாதி தொகுதிகள் கேட்டதாகவும் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டது.


அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதால் அந்த வாக்குகள் அப்படியே அவர்களுக்கு போகும். பாமக, தேமுதிகவும் இந்தக்கூட்டணி பக்கமே போக வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி வாக்குகள் ஒரு பக்கம் அப்படியே இருக்கும். சீமான் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார்.

நாம் தமிழர் கட்சியும்- பாஜகவும் எதிரெதிர் கொள்கைகள் கொண்டவை. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு சீமான் வரப்போவதில்லை.
ஆக, விஜய் இதுவரை கூட்டணியை உருவாக்காததால் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் தவிர்க்க முடியாத நிலை உருவாகி வருகிறது. அதாவது திமுக – காங்கிரஸ் கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என்று தேர்தல் களம் அமையும்.


4 முனை போட்டியால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் 3 முனையாக பிரியும். அதாவது திமுகவிற்கு எதிராக செல்ல வேண்டிய வாக்குகள் 3 பக்கங்களில் பிரியும். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம். 2016 தேர்தலில் இப்படி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து போனதால் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வரான வரலாறு உண்டு.


எப்படியோ, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி ஏற்படப்போகிறது. இந்த நிலையை உருவாக்கி இருப்பவர் விஜய். கிடைத்த சில வாய்ப்புகளை விஜய் தவறவிட்டதால் தான் தவெகவுக்கு சிக்கலான சூழல் உருவாகி இருக்கிறது என்ற விமர்சனமும் உண்டு. இதில் ஏதேனும் மாற்றம் வந்தால் அது மிராக்கிளாகத்தான் (அதிசயம்) இருக்க முடியும். ஆனாலும் தமிழக அரசியலில் விஜய் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார்.


4 முனை போட்டி என்றால் பொதுவாக ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும். தேர்தல் வரட்டும் & பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img