fbpx
Homeபிற செய்திகள்கத்துவட்டிக்கு ஊக்கம் தருகிறதா, ரிசர்வ் வங்கி?

கத்துவட்டிக்கு ஊக்கம் தருகிறதா, ரிசர்வ் வங்கி?

நகைக் கடன் பெற்றவர்கள் மறுஅடகு வைப்பதில் கடுமையான நிபந்தனைகளைகளுடன் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அதன்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு ஏழை எளிய விவசாயிகள், நடுத்தர மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது. ஆனால், தற்போது நகை கடனுக்கான அசல் வட்டி முழுவதையும் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் வங்கிகளின் நகைக் கடனை நம்பி உள்ளோர் கடும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இது குறித்து ஒட்டுமொத்த ஏழை எளிய நடுத்தர விவசாயிகளின் பிரதிபலிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயி துரைராஜ் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். ரூ.5.50 லட்சத்திற்கு இரண்டு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ள அவர், முழு தொகையையும் செலுத்தி நகையை திருப்ப முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் வருமானம் ஈட்டி வந்தாலும், கல்வி, மருத்துவம், விவசாய பணிகள், மகளின் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்று அதன் மூலம் வாழ்வை நகர்த்தி வரும் துரைராஜ், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இவரைப் போல நாடுமுழுவதும பல கோடி பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதோடு பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். எனவே இந்த உத்தரவை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளும் ஏழை, நடுத்தர மக்களும் பெரும்தொகை புரட்ட முடியாமல் வங்கிகளில் வைத்த நகைகளை இழப்பதோடு பெரும் இன்னலுக்கு உள்ளாக நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

மீண்டும் கந்து வட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை இருக்கிறது. கல்வி, மருத்துவ தேவைக்காக நகைகளை அடமானம் வைத்துள்ள ஏழை எளிய குடும்பத்தினர் தற்பொழுது நகையை மீட்க கந்துவட்டி கும்பலிடம் ராக்கெட் வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே கந்துவட்டிக்கு ஊக்கம் தரும் வகையிலான இந்த நடைமுறையை மாற்றி அமைக்க ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் நாடு முழுவதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. அனைவரின் எதிர்பார்ப்பும் இது தான்.

அவசியமே இல்லாமல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்து விட்டு, வங்கிகள் நகைக்கடன் வழங்குவதில் மீண்டும் பழைய நடைமுறையே தொடர மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img