கடந்த நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டதால் பெருமளவு சேதத்தில் இருந்து அந்த மாவட்டங்கள் தப்பித்தன. எனினும் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களில் பயிர்களை வெள்ளம் மூழ்கடித்தது.
மேலும் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து செய்து வருகிறது. மேலும் இந்த புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடும் அறிவிக்கப்பட்டு, அதுவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த புயல் பாதிப்பில் இருந்த தற்காலிக சீரமைப்புப்பணிக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோடி புயல்சேதம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்த போதும் இந்த கோரிக்கைக்கு அழுத்தம் தந்தார்.
புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்தியக்குழுவை அனுப்பி வைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதனையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
மத்தியக்குழுவும் வந்து ஆய்வு மேற்கொண்டது. அக்குழுவிடம் புயல் பாதிப்பில் இருந்து தமிழகத்தை முழுமையாக மீட்டெடுக்க ரூ.6,675 கோடியை மத்திய அரசு ஒதுக்கித் தரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி, மனு அளித்தார்.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு ரூ.944.80 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த காலங்களில் சென்னையை புயல் தாக்கியபோதும் தென் மாவட்டங்களை மழை வெள்ளம் சூறையாடியபோதும் நிதியே தராமல் பாராமுகம் காட்டிய பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பி உள்ளது. அப்போது தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட தரவில்லை என்ற குறையை. இப்போது நிதி ஒதுக்கி நிவர்த்தி செய்திருக்கிறது மத்திய அரசு.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புத் துயரம போக்க மட்டுமல்ல, இதன் மூலம் தமிழ்நாடு அரசுடனான நல்லுறவுக்கும் கை கொடுத்திருக்கிறார், பிரதமர் மோடி என்றால் மிகையாகாது.
நன்றி கலந்த பாராட்டுகள்!



