தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறார்கள்.
இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம் என்னும் மிகப் பெரிய சாதனையைத் தமிழ்நாடு படைத்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பெருக்குவதிலும் குறிப்பாக இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்துவதிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார்.
இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தால் 3,28,280 மாணவிகளுக்கு மேல் பயன்பெற்றுள்ளனர்.
இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திடவும், அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் இன்று (9ம் தேதி) “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
கல்வியே உயர்ந்த செல்வம். இந்த செல்வத்தை ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தின் வாயிலாக, கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள்.
புதுமைப்பெண் `தமிழ்ப் புதல்வன்” திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும், பெற்றோர்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் என்பது மட்டுமல்ல, தமிழ்மொழி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தருகிறது என்றால் மிகையன்று.
தமிழ்வழியில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்று சாதனை படைத்திட வாழ்த்துவோம்!



