மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காணும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றம் காணும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திடவும், மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தின் பங்குதாரர்களாக முழுப்பங்கேற்று சமுதாயத்தின் வெள்ளோட்டத்தில் அவர்களை இணைப்பதே முக்கிய குறிக்கோளாக கொண்டு அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதிசெய்யவும் 2011-ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது.
படித்த வேலையில்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சியும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 3658 நபர்களுக்கு மாதம் ரூ.2000/-மும், 22 நபர்களுக்கு ரூ.4.44 இலட்சம் வங்கி கடன் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு மட்டும் 20 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், 15 நபர்களுக்கு சக்கர நாற்காலி, 10 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 35 நபர்களுக்கு தையல் இயந்திரம், 58 நபர்களுக்கு சாதாரண வகை செயற்கை கால்கள், 14 நபர்களுக்கு கால் தாங்கிகள் மற்றும் 30 நபர்களுக்கு காதொலி கருவிகளும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூழையனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிங்கம் தெரிவித்ததாவது:
நான் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூழையனூரில் வசித்து வருகிறேன். தற்பொழுது நான் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும். ஆனால் நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் சுயமாக தொழில் செய்ய இயலவில்லை கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, எனக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கும் பட்சத்தில் என்னால் சுய தொழில் மேற்கொண்டு எனது குடும்பத்தையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தி கொள்ள முடியும் என மனு அளித்திருந்தேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில், மனு அளித்த ஒரு மாத காலத்திற்குள் தேனி மாவட்டத்தில் முதன் முறையாக எனக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.1.85 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நான் யாரையும் எதிர்பார்க்காமல் எனது சொந்த காலில் நிற்க முடியும். இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொகுப்பு:
இரா.நல்லதம்பி.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ம.ச.மகாகிருஷ்ணன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
தேனி மாவட்டம்.



