நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி ஊராட்சி பகுதிகளில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப் பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதல மைச்சர் அறிவுறுத்தலின்படி கடந்த தொழில்துறை மானிய கோரிக்கை யில் நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில்நுட்ப பூங்கா கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், குன்னூர்- கோத்தகிரி செல்லும் சாலையில் பந்துமை அருகிலுள்ள அரசு நிலம் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு ஏதுவாக உள்ளதாக அறியப்படுகிறது.
இந்த இடத்தில் நடைமுறை சாத்தியங்களை கருத்திற்கொண்டு தேர்வு செய்யப்பட்டால் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் (பொ) சீனிவாசன், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமார மங்களம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



