கரூர் அடுத்த தாந்தோணிமலை பகுதியில், புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், துணை மேயர் சரவணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், முதலில் தாந்தோணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை, தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார்.
அதைத் தொடர்ந்து மருத்துவ வளாகங்களை ஆய்வு செய்து, தேவையான வசதிகள், மருந்துகள் இருப்பு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்ட விழா மேடையில், கரூர் மாவட்டத்தில் ரூபாய் 4.70-கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 15 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு ஆய்வக கட்டிடம் ஆகிய 15 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு இலவச காப்பீட்டு அட்டை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் அதிகப்படியான விருதுகளை தமிழகம் பெற்று வருவதாக தெரிவித்தார்.
மத்திய அரசு வழங்கும் தேசிய தர உறுதி திட்ட விருது 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது 2023 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு வழங்கி வருவதாகவும், இந்த விருதுக்காக, மருத்துவ கட்டமைப்பு, நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் இவை கருத்தில் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கப்பட்ட மொத்த விருதுகளின் எண்ணிக்கை 556-. இதில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக அரசு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 487-. அதற்கு முந்தைய ஆட்சியில் பத்தாண்டு காலத்தில் 69 விருதுகள் மட்டுமே பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதே போல, மற்றொரு லட்சயா விருது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கி வருகிறது. இதுவரை கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்திற்கு மொத்தம் 79 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50 விருதுகள் பெறப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய ஆட்சியில் நான்கு ஆண்டு காலத்தில் 29 விருதுகள் மட்டும்தான் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர்,இதில் கரூர் மாவட்டம் மட்டும் 14 விருதுகள் பெற்றுள்ளது. இந்த விருதுகளை பெற காரணமாக உழைத்த மருத்துவர்கள்,அங்கு பணியாற்றக் கூடிய பணியாளர்கள், துறை ரீதியான அதிகாரிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் சுகாதாரத் துறையில் இத்தனை கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது



