கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்ட சிறுதானிய விதைகள் பயிரிடப்பட்ட நிலங்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குப்புச்சிபாளையம் கிராமத்தில் கந்தசாமி என்பவரது வயலில் சோளம், தனலட்சுமி வயலில் குதிரைவாலி, முருகானந்தம் வயலில் சாமை செயல்விளக்கத் திடல் உள்ளிட்டவற்றை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உலக சிறுதானிய ஆண்டாக நடப்பு 2023ம் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட த்தில் வேளாண் துறை சார்பாக சிறுதானியங்களை அதிக அளவில் பயிரிடுவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்துமிகு சிறுதானியங்கள் திட்டத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறுதானியங்களான கம்பு, குதிரைவாலி, ராகி, வரகு, தினை, சாமை மற்றும் சோளம் போன்றவற்றை அதிக அளவில் பயிரிட ஏதுவாக செயல்முறை விளக்கத் திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் 720 செயல்விளக்கத் திடல்களுக்கு அரசு மானியமாக ரூ.43.2 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநர் (பொ) கலை செல்வி, துணை இயக்குநர் (மாநில திட்டங்கள்) சிவா னந்தம், துணை இயக் குநர் (தோட்டக்கலை) மணி மேகலை, கால்நடை பராமரிப்பு துணை இயக்குநர் பாஸ்கர், கால்நடை மருத்துவர் சிவானந்தம், வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



