ஆன்லைன் மோசடி என்பது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. மோசடி நடக்காத நாளே இருக்காது. அப்பாவிகளான ஏழைகளும் நடுத்தர மக்களும் பேராசைப்பட்டு பெரு நஷ்டம் அடைகின்றனர். தங்கள் வங்கி சேமிப்பை எல்லாம் இழந்து பெரும் வேதனையில் தவிக்கின்றனர்.
ஆன்லைன் மோசடி குறித்து ரிசர்வ் வங்கியும பிற வங்கிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் மோசடி தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இந்த மோசடியில் சிக்காமல் இருக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அடிக்கடி வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறார். நேற்று கோவையில் பல்வேறு காவல்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அவர், மீண்டும் எச்சரித்து பேசி இருக்கிறார்.
செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு பேசியபோது, ஆன்லைன் குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இணைய வழி குற்றங்களை பொறுத்தவரை, பெரும்பாலும் பண மோசடிதான் அதிகமாக நடக்கிறது. அதிக பணம் சேர்க்க வேண்டுமென்று ஆசைகாட்டி, அதற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களை ஏமாற்றுவார்கள்.
அப்படி யாராவது உங்களை ஏமாற்ற நேர்ந்தால், அல்லது நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால், உடனடியாக 1930 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
இந்த குற்றங்களில், உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள் உள்ள குற்றவாளிகளை எளிதாக பிடித்துவிடலாம். ஆனால், வெளிநாடு குற்றவாளிகளை பிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாந்து விடக் கூடாது, என எச்சரித்து இருக்கிறார்.
காவல்துறை சார்பில் மக்களுக்காக “காவல் உதவி” என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும். ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளாவும் உள்ளது. இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும்.
காவல் உதவிசெயலியை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக அதனை தங்கள் செல்போன்களில் குறிப்பாக பெண்கள் பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது. பெண்களுக்கு பெரிய பாதுகாப்பை இந்த செயலி தந்து கொண்டிருக்கிறது.
டிஜிபி சைலேந்திரபாபுவின அன்பான வேண்டுகோளை ஏற்றுகாவல் உதவி` செயலி மூலம் காவல்துறை உதவிகளை பெற்றுக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக, ஆன் லைன் மோசடியில் சிக்கி ஏமாறாமல் பொது மக்களே உஷாராக இருங்கள். டிஜிபியின் அறிவுரையை செவிமடுத்து உங்கள் பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதிக லாபம், அதிக வட்டி கிடைக்கும் என ஆன்லைனில் வந்து ஆசை காட்டுவார்கள்.
பேராசை பட்டு ஏமாந்து விடாதீர்கள்!



