அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் தேர்தலை நடத்தலாம், முடிவை அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எடப்பாடிக்கு சாதகமா, ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு நிறைவு பெற்று விட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 27ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அதில் வேகமான விசாரணையை மேற்கொள்வோம்.
அந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமா, ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த உத்தரவு இரண்டு பேருக்குமே சாதகமான விஷயம்தான்.
தேர்தலுக்கு தடை இல்லை. தேர்தல் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. முடிவுகளை மட்டுமே வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது எடப்பாடிக்கு சாதகமான அம்சம் தான். ஏனென்றால் எடப்பாடியை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை.
தாக்கல் செய்யப்பட்ட 221 வேட்புமனுக்களும் எடப்பாடி பழனிசாமி பெயரில் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் போட்டியின்றி வெற்றி அடைவார். ஆனால் அந்த வெற்றியை எடப்பாடி அறிவிக்க முடியாது. மற்றபடி அவர்தான் பொதுச்செயலாளர் என்று தெரிந்துவிடும். எனவே இந்த உத்தரவு எடப்பாடிக்கு சாதகம்தான்.
ஆனால் இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
இது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகம். அதன்படி ஒருவேளை இந்த 24ம் தேதி தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்களை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தது சரி, தீர்மானங்கள் செல்லாது அல்லது சிவில் கோர்ட்டு இதில் விசாரிக்கும் வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உத்தரவு போடப்பட்டால் அது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக அமைந்துவிடும்.
மொத்தத்தில் நேற்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு இரண்டு பேருக்குமே சாதகமான சூழ்நிலையைத் தான் ஏற்படுத்தி உள்ளது!. குதிரை ரேசில் எடப்பாடி பழனிசாமி அதிவேகமாக போய்க்கொண்டிருக்கிறார். ஓ.பன்னீர் செல்வமும் விடாது பின் தொடர்கிறார்.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என்னும் மகுடம் சூடப்போவது உறுதி. அதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது… அவ்வளவு தான்.
நாடாளுமன்றமாக இருந்தாலும் சட்டப் பேரவையாக இருந்தாலும் எதிர்க்கட்சி வலுவாக இருந்தால் தான் ஜனநாயகத்திற்கு நல்லது.
எடப்பாடி பழனிசாமிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!



