சேலம் மாவட்டம் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 19 அரசு / தனியார் பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி சார்ந்த 15 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல்வர்மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தினை கடந்த 01.03.2022 அன்று தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ எனும் இத்திட்டம் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து ஆட்சியர் செ. கார்மேகம்தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 19 அரசு / தனியார் பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி சார்ந்த 15 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில், இளைஞர்கள் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித் திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் ‘நான் முதல்வன்’ இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி வழங்குவது ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய் ப்பினை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம்.
இதற்கான இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இளைஞர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், மாநிலத்தை இந்தியாவின் திறன் மையமாக மாற்றவும் தேவை அடிப்படையிலான மற்றும் தொழில் சார்ந்த திறன்களை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு பல்வேறு குறுகிய கால திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சேலம் மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் அமைந்துள்ள திறன் பயிற்சி நிலையங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனப் பராமரிப்பு, ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னிஷியன், சரக்கு கண்காணிப்பு நிர்வாகி, ஒப்பனைக் கலைஞர், சுய தொழில் தையல்காரர், CCTV இன்ஸ்டாலேஷன், நுண்ணீர் பாசன தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட 18 வகையான திறன் பயிற்சி சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திறன் பயிற்சி நிலையங்கள் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2200 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில் 750 பயிற்சியாளர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று வழங் கப்பட்டுள்ளன.
விவரங்களுக்கு www.tnskill.tn.gov.in என்ற இணைய தளத்திலோ அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், சேலம்7 அலுவலகத்தினை நேரிலோ அல்லது 9499055827 என்ற அலை பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்துள்ளார்.
“முழுமையான பயிற்சியால்
கிடைத்தது சிறப்பு விருது”
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சேலம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று உலகளாவிலான திறன் பயிற்சிப் போட்டியில் விருது பெற்ற, சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியைச் சேர்ந்த மாணவி பி.வி.சரஸ்வதி தெரிவித்ததாவது:
தனியார் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறேன். தந்தை கட்டுமானத் தொழில் செய்கிறார்.
மாவட்ட மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் வழங்குவதை அறிந்து விண்ணப்பித்தேன்.
மாவட்ட அளவிலான திறன் பயிற்சிக்கு தேர்வு செய்து, 3 மாதங்கள் செவிலியர் பணிக்கான முழுமையான பயிற்சியினை வழங்கினர்.
இப்பயிற்சியின் பலனாக மாநில அளவிலான திறன் பயிற்சித் தேர்வில் வெற்றி பெற்று, புதுதில்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான திறன் பயிற்சித் தேர்விலும் வெற்றி பெற்றேன்.
பின்னர், கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற உலகளவிலான திறன் மேம்பாட்டுப் போட்டியில் (செவிலியர் பிரிவு) சிறப்பாக பயிற்சி பெற்றமைக்கான விருது வழங்கப்பட்டது.
இதனால் எனது பணிக்கான மதிப்பு அதிகரித்துள்ள நிலையில் எதிர்கால முன்னேற்றத்திற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இத்திறன் மேம்பாட்டுக் கழகத்தினை சிறப்பாக நடத்திவரும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“தொடக்கத்திலேயே
5 இலக்கு சம்பளம்”
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சேலம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த கே.பவித்ரா தெரிவித்ததாவது:
தந்தை விவசாயம் செய்கிறார்.
இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும், இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றுள்ளேன். கணினி தொடர்பான பணிகளில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் கணினி தொடர்பான பணிகளையே தேடி வந்தேன்.
சேலம் மாவட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் கணினி தொடர்பான பயிற்சிளைப் பெற விண்ணப்பித்தேன். அதன்படி, 2 மாத காலம் ஆட்டோ கேட், போட்டோஷாப், கோரல் டிரா, டேலி, எம் எஸ் ஆபீஸ் உள்ளிட்ட கணினி செயல்பாடுகளை உள்ளடக்கிய பயிற்சிகளும், ஆளுமைத் திறன் மேம்பாடு, கம்யூனிகேசன் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்றும் நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சிகளின் பலனாக தனியார் நிறுவனத்தில் கணினி மேற்பார்வையாளராக பணி கிடைத்துள்ளது.
இதன்மூலம் தொடக்கத்தில் மாத சம்பளமாக ரூ.15,000/- வழங்குவதாக தெரிவித்துள்ளனர். மன திருப்தியுடன் இப்பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.
எவ்வித பயிற்சிக் கட்டணமும் இல்லாமல் எனக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கினர். இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வெளியீடு:
செய்தி – மக்கள் தொடர்பு அலுவலகம்,
சேலம் மாவட்டம்.



