இந்தியா -சீனா இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமாகி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான 3,440 கி.மீ நீண்ட எல்லை பகுதியில்தான் இரு நாடுகளுக்கும் இடையேயான தகராறு இருந்து வருகிறது.
இது தொடர்பாக இரு நாடுகளும் தங்களுக்கென சொந்தம் கொண்டாடுகின்றன.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பகுதியில் இந்தியா மற்றும் சீன படையினர் நேருக்கு நேராக மோதிக் கொண்ட சம்பவத்தில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சீன தரப்பிலும் 35 வீரர்கள் இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியானாலும் சீன அரசு 4 பேர் மட்டுமே இறந்ததாக பல மாதங்களுக்கு பிறகே தெரிவித்தது.
இதேபோன்று இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே கடந்த 9ம் தேதியும் மோதல் நடந்துள்ளது.
இது குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இப்போதைய தகராறு என்பது மிகவும் அண்மை காலத்தில், அதாவது கடந்த 9ம் தேதி நடந்ததாகும்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங்க் பகுதியில் இருநாட்டின் வீரர்களும் மோதிக்கொண்டனர். ஆனால், காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர், இந்திய தரப்பில் என்னென்ன சேதம் ஏற்பட்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. நடந்த மோதலில் இந்திய தரப்பில் ஒரு வீரர் கூட இறக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
இந்த சண்டையில் இரு நாடுகளைச் சேர்ந்த சில வீரர்கள் காயமடைந்தனர் என இந்திய ராணுவம் கூறியுள்ளது. ஆனால், இது குறித்து இதுவரை சீனா எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. இந்தியாவும் இந்த தகவலை உடனடியாக வெளியிடாமல் இருந்துள்ளது.
200க்கும் மேற்பட்ட சீன வீரர்களை வெறும் 22 இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி, துரத்தியடித்திருக்கிறார்கள். இந்திய எல்லைப்பகுதியில் உள்ள முக்கியமான சிகரத்தை கைப்பற்ற சீன ராணுவத்தினர் முயன்றதாகவும், அதனால் இந்திய ராணுவத்தினர் அவர்களை விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நமது ராணுவத்தின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. நமது வீரர்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரத்தைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம், பாராட்டுகிறோம்.
அத்தகைய வீரச்செயலை ஏன் மூடி மறைக்க வேண்டும்? இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? தற்போது மீண்டும் இரு நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டது, நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மெத்தனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது, தூக்கத்தில் தான் இருக்கிறது, லடாக்கில் சீனாவின் முன்னேற்றம் கவலை அளிக்கிறது.
ராஜ்நாத் சிங்கின் விளக்கம் முழுமையற்றது. உண்மையை மோடி மூடி மறைக்கிறார், என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்க கூடாது. அது ஓர் விவாதப்பொருளாக மாறிவிடக் கூடாது. இதிலும் அரசியல் உள் நுழைந்தால் அதைவிட ஆபத்தான விஷயம் வேறு இருக்க முடியாது!