fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 10,880 மாணவர்களுக்கு ரூ.5.52 கோடியில் இலவச மிதிவண்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 10,880 மாணவர்களுக்கு ரூ.5.52 கோடியில் இலவச மிதிவண்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022 -ம் கல்வி ஆண்டில், அரசு, அரசு நிதியுதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவிகளுக்கு 10,880 இலவச மிதிவண்டிகள் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 சதவீதம் இடஒதுக்கீடானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு 30 சதவீதமும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதமும், ஆதிதிராவிடருக்கு 18 சதவீதமும் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ் தெரிவித்ததாவது:
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பள்ளிப்படிப்பு முதல் இளங்கலைப் பட்ட படிப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை, அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.

பட்டயப்படிப்பு (Diploma/Polytecnic) மற்றும் தொழற்கல்வி படிப்பு (Professional Course) பயில்பவர்களுக்கு குடும்பத்தில் முதல் பட்டய/பட்டதாரியாகவும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

கிராமப்புறங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்த்து, தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டொன்றுக்கு ஊக்கத்தொகையாக 3 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிக்கு ரூ.500/- மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ.1000/-ம் பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்தொகையானது மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக,அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய / மாநிலஅரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகளுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

38 விடுதிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 38 விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 35 விடுதிகள் பள்ளி விடுதிகளாகவும், 3 கல்லூரி விடுதிகளாகவும் செயல்பட்டு வருகிறது. இவ்விடுதிகளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு ஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் நாளிதழ் மற்றும் ஓர் ஆங்கில நாளிதழ் வழங்கப்பபடுகிறது.

விடுதிகளில் தங்கிப்பயிலும் 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகின்றன. 4 -ம் முதல் 10 -ம் வகுப்பு வரை பயிலும் விடுதி மாணவ/மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படு
கின்றன.

வண்ணத்தொலைக்காட்சி, விளையாட்டு உபகரணங்கள், சுத்தகரிக்கபட்ட குடிநீர், நூலக புத்தகங்கள் மற்றும் இன்வர்ட்டர் கருவி, எவர்சில்வர் தட்டுகள், டம்ளர்கள், பாய், போர்வை, ஜமுக்காளம் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் 3 கட்டமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசு, அரசு நிதியுதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவிகளுக்கு இலவசமாக மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-&2022 -ம் கல்வி ஆண்டில் 10,880 இலவச மிதிவண்டிகள் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, மாணவ/மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்திட, மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சலவைத்தொழில் புரிபவர்களுக்கு, சுயதொழில் செய்து பொருளாதார நிலையை உயர்த்திடும் பொருட்டு, சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலாமாக்களுக்கு 214 மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழங்கப்பட்டன.

வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, வஃக்பு நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதிற்குட்பட்ட உலமாக்களுக்கு புதிய இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கு தமிழக அரசால் வாகனத்தின் விலையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகையினை மானியமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, அம்மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

“குடும்பத் தேவைகள் பூர்த்தி”

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் சுந்தர் நகரைச் சேர்ந்த ராஜாத்தி தெரிவித்ததாவது: கணவர் கூலி வேலை செய்து வருவதால் குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்து, விண்ணப்பித்தேன். வறுமை நிலையில் உள்ள எனக்கு தையல் இயந்திரம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதன் மூலம் பெறுகின்ற வருமானம் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். இத்திட் டத்தை வழங்கிய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“வருமானம் உயர வழி கிடைத்தது”
தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள மு.மோகனா தெரிவித்ததாவது: தையல் பயிற்சி முடித்திருக்கிறேன். தையல் இயந்திரம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் தையல் தொழில் செய்து, என் கணவருக்கு உதவியாக குடும்ப வருமானத்தை உயர்த்த பெரும் உதவியாக இருக்கும். தையல் இயந்திரம் கிடைப்பதற்கு உதவியாக இருந்த முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
சே.ரா.நவீன் பாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img