கடந்த 2011ம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார்.
சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் திமுகவின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து திமுகவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார்.
மேலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து அவருக்கு அங்கீகாரம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், திமுக தொண்டர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
முதல் குரல் எழுந்தபோதே நாமும் மேற்கண்ட அவரது அயராத உழைப்பைச் சுட்டிக்காட்டி, இந்த இளவயதிலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராகும் தகுதி இருக்கிறது, விரைவில் அவர் அமைச்சராவார் என்று கூறி, வாழ்த்தையும் அட்வான்ஸாகத் தெரிவித்து இருந்தோம். அது இப்போது நிறைவேறி இருக்கிறது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சேப்பாக்கம்- & திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார்.
இந்தப் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில். டிசம்பர் 14, 2022 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும்“ என கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் இதனை பலவிதமாக விமர்சிப்பார்கள். அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் தான் முக்கியம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சாதனைகள் செய்து வருகிறது; மேலும் மேலும் சாதனைகளை நோக்கிப் பயணிக்கிறது.
மசோதாக்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கும் ஆளுநர்…ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றச்சாட்டுகளை அடுக்கும் எதிர்க்கட்சிகள்… இதையெல்லாம் தாண்டி தமிழகம் முன்னேற்றப்பாதையில் வீறுகொண்டு பாய்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த லட்சியப்பயணத்தில் உதயநிதி ஸ்டாலினும் இணையப் போகிறார். இரட்டை குதிரை வேகத்தில் தமிழகம் முன்னேறட்டும்.
உதயநிதி ஸ்டாலினின் மக்கள் பணி உதயசூரியனாக ஜொலிக்கட்டும்; நல்வாழ்த்துகள்!