விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும் 22.04.2022 முதல் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 வட்டார முகாம்கள் மூலம் மொத்தம் 4562 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’
என்னும் வள்ளுவர் குறளுக்கேற்ப ஒரு நோய் வருகிறது என்று சொன்னால் அந்த நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். இது உடல் நோய்க்கு மட்டுமின்றி சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்.
ஒரு மாநிலம், ஒரு நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு குறியீடுகள் இருக்க வேண்டும்.
அதில் ஒன்று கல்வி, மற்றொன்று ஆரோக்கியம். இந்த சுகாதாரமும், கல்வியும் எந்த நாட்டில் நிலைபெற்று இருக்கிறதோ அந்த நாட்டில் தான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம் ஆகிய இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு ஏதேனும் சிரமங்கள் வராமல் தடுப்பதற்கான ஒரு முயற்சி.
முதல்வர் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறார்.
தமிழக மக்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். நோய் வரும் முன்னே மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், டாக்டர் கலைஞர் கொண்டு வந்த இந்த வருமுன் காப்போம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர் என அனைத்து மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே தேடி சென்று, மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த முகாம் மூலம் ஏதேனும் ஆரம்ப கட்ட பிரச்சினைகள் இருந்தால் அதனை எப்படி தீர்க்க வேண்டும். அதற்கு என்னென்ன சிகிச்சை எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை அளவில் கூட செய்ய வேண்டும் என்று சொன்னால் அதனையும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யக்கூடிய அளவிற்கு சிறப்பு வாய்ந்த திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யார் யாருக்கு
இந்த முகாமில், தாய் சேய் நலம், சிறப்பு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, புற்று நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, மனநல மருத்துவம், இந்திய முறை மருத்துவம், ஐ.சி.டி.சி சேவை உள்ளிட்ட பிரிவுகள் மூலம், இரத்தம் (எச்.பி.) ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை (30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு), இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை (30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 18-29 வயதிற்குரியவர்களுக்கு தேவையிருப்பின்) இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை (30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 18-&29 வயதிற்குரியவர்களுக்கு தேவையிருப்பின்) இரத்தத்தில் கொழுப்பின் அளவீடு பரிசோதனை. மலேரியா இரத்தத்தடவல் பரிசோதனை, இ.சி.ஜி (இதயத் துடிப்பு அளவு), கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, அல்ட்ரா சோனாகிராம் கர்ப்பிணிகள் அனைவருக்கும் (மற்றவர்களுக்கு பரிந்துரையின் பேரில்) கண்புரை ஆய்வு மற்றும் பார்வைக் குறைபாட்டிற்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல், செமி ஆட்டோ அனலைசர் மூலம் பரிசோதனை மற்றும் முக்கிய பரிசோதனைகள், கொரோனா தடுப்பூசி வழங்குதல், குழந்தைகளுக்கு மற்றும் தாய்மார்களுக்கு இதர தடுப்பூசி வழங்குதல், கொரோனா சம்பந்தமாக சளி பரிசோதனை செய்தல் மற்றும் காசநோய் பரிசோதனை, கொரோனா நோய் தடுப்பு, டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும் 22.04.2022 முதல் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 வட்டாரங்களில் முகாம் நடைபெற்றுள்ளது.
இம்முகாம்கள் மூலம் 391 நபர்கள் மகப்பேறு/மகளிர் சிறப்பு மருத்துவ சிகிச்சையும், 502 நபர்கள் உயர் இரத்த அழுத்த சிகிச்சையும், 547 நபர்கள் சர்க்கரை நோய்க்கான சிகிச்சையும், 289 நபர்கள் கருப்பை புற்றுநோய் பரிசோதனையும், 1445 நபர்கள் இரத்த நீர் பரிசோதனையும், 132 நபர்கள் சர்க்கரை நோய்க்கான சிகிச்சையும், 1256 நபர்கள் இதர சிகிச்சைகளும் என மொத்தம் 4562 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
‘அறிந்தேன் சென்றேன் ஆலோசனை பெற்றேன்’
இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளி தெரிவிக்கையில், என் பெயர் நித்யா. எனக்கு வயது 22 ஆகிறது. நான் அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் வசித்து வருகிறேன். எனக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது கர்ப்பமாக உள்ளேன். கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாம் நடைபெறுவதை அறிந்து, இந்த முகாமில் கலந்து கொண்டேன். நான் கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனைகள் பெற்றேன்.
எனக்கு கர்ப்ப காலத்தில் என்னென்ன ஊட்டச்சத்து உணவுகள் உட்கொள்ள வேண்டும். கருவில் இருக்கும் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பாக பராமரிப்பது குறித்த வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இது என் போன்ற ஏழை கர்ப்பிணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இதுபோன்ற முகாம்கள் அமைத்து கொடுத்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றி.
‘செலவால் தயக்கம் முகாமில் கிடைத்தது தீர்வு’
என் பெயர் முத்துமாரி. அருப்புக்கோட்டையில் வசித்து வருகிறேன். எனக்கும் எனது கணவருக்கும் உடல்நிலை மருத்துவ பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள நினைத்திருந்தோம்.
ஆனால் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் சில ஆயிரக்கணக்கில் செலவாகும். எங்கள் குடும்ப சூழ்நிலையில் அந்தளவிற்கு பொருளாதாரம் இல்லை. இந்த நிலையில், எங்கள் பகுதியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம். எனக்கு பரிசோதனை செய்து சர்க்கரை நோய்க்கான மருந்துகளும், என் கணவருக்கு கண் பரிசோதனை செய்து உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொண்டோம்.
எங்களை போன்ற ஏழை, எளிய மக்களும், வயதானவர்களும் பயன்பெறும் வகையில் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே இந்த மருத்துவ முகாமினை அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றி.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.



