fbpx
Homeபிற செய்திகள்‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 7,598 பேருக்கு ரூ.64.66 கோடி நலத்திட்ட உதவி- தூத்துக்குடி...

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 7,598 பேருக்கு ரூ.64.66 கோடி நலத்திட்ட உதவி- தூத்துக்குடி மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி!

உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுநாள்வரை பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 7,598 பேருக்கு ரூ.64.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னதாக, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு, தான் முதலமைச்சராக பதவியேற்றவுடன் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தினை துவக்கி, அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கென தனியாக ஒரு துறையினை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சி பணி நிலையில் சிறப்பு அலுவலரை நியமித்து, பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சராக பதவியேற்றவுடன் மு.க.ஸ்டாலின் 07.05.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார். அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

100 நாள் வாக்குறுதி
உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்படும் முதல்வர் தனது தேர்தல் பரப்புரையின்போது, மாவட்டந்தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது தான் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதி அளித்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தார்.

அத்துடன், ஷில்பா பிரபாகர் சதீஷ் என்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தார். பொதுமக்களிடம் இருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, திருமண நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் சுயதொழில் கடன்களுக்கான நிதியுதவி போன்ற பல்வேறு கோரிக்கைகள் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்டந்தோறும் பரிசீலித்து அதில் தகுதியுடைய நபர்களுக்கு உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த மாவட்ட விருது
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சரின்’ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தூத்துக்குடி மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 14.08.2021 அன்று தமிழக முதல்வர் விருது வழங்கினார்.
‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் சரியான முறையில் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மனுக்களைப் பெறும் அலுவலர்கள் மனுக்களின் உண்மை தன்மைகளை உறுதி செய்தபின் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனிநபர் கோரிக்கையை பரிசீலிக்கும் போது இடைக்கால பதில்களை வழங்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.
தவறுதலாக பெறப்படும் மனுக்களை உரிய துறைக்கு வழங்கி உறுதி செய்திட வேண்டும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் மனுக்களின் குறைகள் களையப்படுவதை தொடர்புடைய அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

“முதல்வரின் முகவரி”
முதல்வர் 03.11.2021 அன்று முதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை செயல்படும் என்று ஆணையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

11,310 மனுக்கள்
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சரின்’ திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுநாள்வரை பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை முதியோர் உதவித்தொகை,

விதவை உதவித்தொகை,
சுயதொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரியும், சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் கோரியும் பெறப்பட்ட சுமார் 11,310 மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

119 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை, 1312 நபர்களுக்கு முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1000 வீதம் ரூ.13.12 இலட்சம் வழங்கப்பட்டது.

11 நபர்களுக்கு ரூ.13.12 இலட்சம் மதிப்பில் வணிகக் கடன் உதவியும், 75 நபர்களுக்கு ரூ.5.25 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 7,598 நபர்களுக்கு ரூ.64.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

பெறப்படும் மனுக்கள் மீது துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில், தகுதியான நபர்களின் மனுக்கள்மீது விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

‘தண்ணீரும் வருது
நேரமும் மிச்சமாகுது’
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த, திருச்செந்தூரை சேர்ந்த வெற்றிதுரை தெரிவிக்கையில், குடிக்கிற தண்ணீருக்காக தெருக்குழாய்ல கால் கடுக்க நின்னு தண்ணி பிடிச்சிட்டிருந்தேன்.

என் வீட்டுக்கு தண்ணி கனெக்சன் கேட்டு பல தடவை மனு கொடுத்தும் பலன் கிடைக்கல. எங்க தொகுதில ஸ்டாலின் நிகழ்ச்சி நடக்கும்போது மனு கொடுத்தேன். ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள்லயே கோரிக்கை நிறைவேறிடுச்சு.

இப்போ வீட்டுக்கே நல்ல தண்ணீ வர்ரதனால என்னோட உழைப்பும், நேரமும் மிச்சமாகுது. அது என் குடும்பத்துக்கு நல்ல பலன் கிடைச்சிது. முதலமைச்சரோட இந்த திட்டத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் என் நன்றியை சொல்லிக்கிறேன் என்றார்.

‘முதல்வர் வந்தாரய்யா
வெளிச்சமும் வந்ததய்யா’
தெருவிளக்கு பெற்ற அய்யனடைப்பு அ.கைலாசபுரத்தை சேர்ந்த பயனாளி வேலம்மாள் தெரிவித்ததாவது:

அய்யனடைப்பு ஊராட்சி குளக்கரை தெருவில் வசித்து வருகிறேன். இங்கு தெருவிளக்கு இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது. பல முறை தெருவிளக்கு கேட்டு மனு கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

எங்க ஊருக்கு ஸ்டாலின் வந்தாரு, அப்போது மனு கொடுத்தோம் உடனே தெருவில் தெருவிளக்கு மாட்டிட்டாங்க. எங்க மேல அக்கறை காட்டின தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிலுவையின்றி பட்டா மாறுதல்
உட்பிரிவில்லா பட்டா மாறுதல் (OPT NISD) இனங்களில் 15 நாட்களுக்கு மேல் நிலுவையின்றி பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. இதனை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் 1 மாதத்திற்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. 1 மாதத்திற்கு மேல் நிலுவையின்றி சான்றிதழ்கள் வழங்கப்படுவது துணை ஆட்சியர் நிலை அலுவலர்களால் கண்காணிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.46 லட்சம் உபகரணங்கள்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 11 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,

இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 9 நபர்களுக்கு, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 5 நபர்களுக்கு, சக்கர நாற்காலி 6 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் 3 நபர்களுக்கும், காதொலி கருவி 8 நபர்களுக்கும் என மொத்தம் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.46 இலட்சம் மதிப்புடைய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஏழை, எளியோர் நலன், மகளிர் நலன், முதியோர் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி மேற்கொண்டு வருகிறார். எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களை முறையாக பயன்படுத்தி, தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு:
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
எஸ். செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img