fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி அருகே 70 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து தந்தை, மகள் சாவு

தர்மபுரி அருகே 70 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து தந்தை, மகள் சாவு

கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா (42). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கார்மென்ட்சில் மானேஜராக பணியாற்றி வந்தார். இவருக்கு உமா லட்சுமி (32) என்ற மனைவியும், சுஷ்மிதா(13) என்ற மகளும் உள்ளனர்.

சுஷ்மிதா அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீரா மனைவி, மகளுடன், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் உள்ள உமா லட்சுமியின் தங்கை வீட்டிற்கு காரில் சென்றனர்.

மாலையில் கார் மூலம் பெங்களூரு திரும்பி கொண்டிருந்தனர். காரை வீரா ஓட்டிச் சென்றுள்ளார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால், சாலையோரத்தில் மழை நீர் தேங்கியிருந்தது.

பொன்னேரி என்ற இடத்தில் கார் சென்ற போது, முன்னால் சென்ற லாரி மழை நீரில் இறங்கியதால் கார் கண்ணாடி மீது தண்ணீர் தெளித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த 70 அடி ஆழ விவசாய கிணற்றில், தடுப்புகளை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.

கார் விழுந்த வேகத்தில் பின் கதவு திறந்ததால், உமாலட்சுமி நீந்தி வெளியே வந்துள்ளார்.விபத்தை பார்த்த டூவீலரில் வந்த நபர் ஒருவர், அப்பகுதி மக்களிடம் கூறினார். இதையடுத்து கிணற்றில் தத்தளித்த உமாலட்சுமியை மீட்டு, காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் தீயணைப்பு துறையினர் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் சுமார் 50அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மழை பெய்ததால் சிரமம் ஏற்பட்டது.

பின்னர் மாலை 6 மணியளவில் ராட்சத மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. தொடர்ந்து நகராட்சியில் மழை நீர் அகற்ற பயன்படுத்தும் மோட்டார் கொண்டு வந்து தண்ணீர் எடுக்கப்பட்டது.

இரவு 8.30 மணியளவில் கார் மீட்கப்பட்டது. காருக்குள் தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img