துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்குள்பட்ட அருந்ததியர் காலனியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வெள்ளிக் கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசோகபுரம் ஊராட்சிக்குள்பட்ட கணபதி நகர், எஸ்.எம்.நகர் களில் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இப்பகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளமென பாய்ந்து இந்த நகர்களுக்குள் புகுந்தன. இதனால் இங்கு வசிப்போர் வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து பொதுமக்கள் கிராமநிர்வாக அலுவலர் ஆனந்தனுக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் வருவாய் ஆய்வாளர் கண்ணகி மற்றும் ஆனந்தன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
இதற்கிடையில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் அங்கு வந்து மழைநீர் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டு உடனடியாக நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
ஆய்வின்போது ,கோவை வடக்கு வட்டாட்சியர் கோகிலாமணி, அசோ கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதற்கிடையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் புதுப்பாளையம் அருகே தடுப்பணை நிரம்பி வழிந்ததால் ரயில்வே பாலத்தின் அருகே பள்ளத்தின் ஓரத்தில் குடியிருக்கும் பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பிற்குள்ளாயினர்.
தொடர்ந்து பெய்யும் மழையினால் கதிர்நாயக்கன்பாளையத்திற்கு மேற்கே உள்ள குருவரிஷி மலையில் புதிதாக அருவிகள் உருவாகியிருப்பது பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. மழையினால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்



