முதியோர் உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 1124 மனுக்கள் மீது மனுதாரர் முன்னிலையிலேயே நடவடிக்கை மேற் கொண்டார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந் திட்ட வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(செப்.20) நடந்தது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 1124 மனுக்கள் பெறப்பட்டன.
மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் அறிவுறுத்தினார்.
முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் பணி புரியும் சமையலர்களுக்கு 2021- 2022-ம் ஆண்டிற்கு வரப்பெற்ற 817 சுகாதாரப் பேழைகளை திருப்பூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கு வழங்கினார்.
சத்துணவு மையங்களில் அமைக்கப் பெற்ற காய்கறி தோட்டத்தை சிறப்பாக பராமரித்தல் போட்டித் தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு கேடயத்தினை வழங்கி, பாராட்டுகளை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, சமூக பாது காப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சிவகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



