கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 75 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகள் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தின்படி, மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை, அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெறுபவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படும்.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுவர்.
நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும், ஊரகப் பகுதியில் ஆனைமலை வட்டாரம், ஆழியாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் வாகனங்களை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
இந்த வாகனங்களில் நோயாளிக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும் .
அதனுடன் எந்தெந்த மருந்துகளை எந்த வேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டி அட்டையும் வைக்கப்பட்டிருக்கும் .
இரண்டு மாதங்களுக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்து மீண்டும் 2மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



